உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரம்பரியத்தை கைவிடாத ஆதியூர்

பாரம்பரியத்தை கைவிடாத ஆதியூர்

பொள்ளாச்சி: ஸ்ரீராமபிரானுக்கு கடந்த, 300 ஆண்டுகளாக, புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் ஊர் திருவிழாவாக கொண்டாடுகிறது  ஆதியூர் கிராமம்.  நகரம், கிராமம் என இருந்தாலும் வாழும் மக்களின் வழிபாட்டில் வித்தியாசம் இருப்பதில்லை. அதிலும் மனம், உடல்,  உணவு கட்டுப்பாட்டை மீறாமல், ஊரே விரதம் இருந்து, கடைசி சனிக்கிழமையை பக்தி திருநாளாக கொண்டாடும் கிராமம் ஆதியூர்.  பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள இச்சிறு கிராமத்தில் நான்கு தலைமுறைக்கு முன் ராமபிரானுக்காக  ஊர்மக்கள் கோவில்  கட்டி வணங்கினர்.  அன்று முதல் ஒவ்வொரு நாளும் குறிப்பாக சனிக்கிழமைகளில், ஊர்மக்கள் விரதம் இருப்பதை வழக்கமாக  கொண்டுள்ளனர். புரட்டாசி மாதம் பிறந்ததும் ‘குடிமகன்’கள் கூட பக்திமானாக மாறி விடுகின்றனர்.

அப்படியே குடித்தாலும் ஊருக்குள் யாரும் வருவதில்லை. இந்தாண்டும், பாரம்பரிய திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது. கோவிலில்,  ஸ்ரீராமன் கருடவாகனத்தில் எழுந்தருளல்,  அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகாலை, 4.00 மணிவரை அன்னதானமும்  நடந்தது. பரதநாட்டியம், பஜனையும் நடந்தது. ராமபெருமானின் அம்பு–வில் ஊர்வலமும், அபிஷேகமும் நடத்தப்பட்டது.  விழா குழுவினர்  கூறுகையில், ‘தலைமுறைகளாக நடக்கும் இவ்விழாவுக்கான அத்தனை செலவுகளையும் ஊர்மக்களும், மனமுவந்து கோவிலுக்கு  செய்பவர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். நாள் முழுவதும் நடக்கும் அன்னதானத்துக்கு யாரிடமும் வசூலிப்பதில்லை. பக்தர்களே அரசி  மூட்டைகளை காணிக்கையாக வழங்குகின்றனர். அன்னதானத்துக்கு தேவையான காய்கறிகளை கிராம விவசாயிகள் கொடுக்கின்றனர்,’  என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !