பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தங்கத்தேர் வெள்ளோட்டம்
ADDED :3316 days ago
வாழப்பாடி: சேலம், வாழப்பாடி அருகே, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு, அதே பகுதியை சேர்ந்த பக்தர்களின் நன்கொடை மூலம், தங்கத்தேர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 1.50 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று கிலோ தங்கத்தில், நவீன எலக்ட்ரோ பிளாஸ்ட் முறையில், தங்கத்தேர் தயாரிக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், 6:30 மணி வரை, தங்கத்தேர் உற்சவரான சிவனுக்கு சோமாஸ்கந்தர் சிறப்பு ஹோம பூஜை வழிபாடும், ரத பிரதிஷ்டை வழிபாடும் நடந்தது. மாலை, 6:00 மணியளவில், தங்கத்தேர் வெள்ளோட்டம் நடந்தது. தேரில், தான்தோன்றீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில், வாழப்பாடி, ஆத்தூர், சேலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.