தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்!
கர்நாடகாவிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த நீங்கப்பா என்பவன் தன் 16ம் வயதிலேயே திருடத் தொடங்கி விட்டான். ஜன்னல் கம்பிகளை வளைத்து வீடுகளுக்குள் போய் திருடுவது அவனுக்கு கை வந்த கலை. 212 வீடுகளில் திருடிய பிறகும் அவன் காவல்துறையிடம் சிக்கவில்லை. இது அவனுக்கு பெரும் தைரியத்தைக் கொடுத்தது. பல ஆண்டுகளாக தான் திருடிய பொருட்களை விற்று சுகமாக வாழ்ந்தான். 213 வது வீட்டில் திருடிய போது போலீசில் சிக்கிக்கொண்டான். விசாரணைக்குப் பிறகு, தான் திருடிய பொருட்களை எங்கெங்கு விற்றேன் என்று பட்டியல் கொடுத்தான். அப்போது அவனுக்கு வயது 26. பொருட்கள் ஓரளவு மீட்கப்பட்டன. நீதிபதி முன் நிறுத்தப்பட்ட நீங்கப்பா தன் தவறுகளை ஒப்புக்கொண்டான். அவனுக்கு நீதிபதி 20 ஆண்டு தண்டனை விதித்தார், சிறையில் அவனது நன்னடத்தை காரணமாக முன்னதாகவே விடுதலை கிடைத்து விட்டது. அவனுக்கு வேறு வேலையே தெரியாததால் மீண்டும் திருட ஆரம்பித்தான்.
ஒரு பேராசிரியரின் வீட்டில் திருட முயன்ற போது, அந்த வீட்டாரே அவனைப் பிடித்து விட்டனர். ஆனால், நல்ல மனமுள்ள பேராசிரியர் அவனை மன்னித்து வெளியே அனுப்பி விட்டார். அதன் பின்னும் நீங்கப்பா பல இடங்களில் திருடவே செய்தான். அப்போதெல்லாம் பேராசிரியர் தன்னை மன்னித்து வெளியே அனுப்பியது அவன் மனசாட்சியை உறுத்திக் கொண்டேயிருந்தது. அதன் பின் அவன் திருடுவதை விட்டு விட்டான். இதன்பின் தான் திருடிய 213 வீடுகளுக்கும் சென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்க பாதயாத்திரையாக கிளம்பினான். எல்லா வீடுகளுக்கும் சென்று தான் அங்கு திருடியதையும், அதே நேரம் அந்தப் பொருட்களைத் திருப்பித் தர முடியாத நிலையில் இருப்பதையும் விவரித்தான். அவர்களிடம் மன்னிப்பு கேட்டான். அவர்களும் அவனை மன்னித்து விட்டனர். இந்த விஷயம் பத்திரிகையாளர்களுக்கு தெரிய வரவே அவனைப் பார்த்தனர். அவர்களிடம்,“என்னால் பாதிக்கப்பட்ட மக்கள் என்னை வெறுக்கவில்லை. மாறாக நண்பனாகவே ஏற்றுக்கொண்டார்கள். என் மனம் திருந்துதலை அவர்கள் பெருமையாகப் பார்த்தனர். நான் இன்னும் பல வீடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இப்போது மனம் அமைதியாக இருக்கிறது. அது மட்டுமல்ல! இப்போது வேலை செய்து வருமானத்துக்கு வகை தேடிக் கொண்டிருக்கிறேன்,” என்றான். “நான் விரும்புவது பாவியை அல்ல. அன்பு நிறைந்த தயாளத்தை. ஏனெனில் நான் அழைக்க வந்தது நீதிமான்களையல்ல. பாவிகள் மனம் திருந்தவே” என்று பைபிளில் (அதிகாரம் ம:9:13) கூறப்பட்டுள்ளது நீங்கப்பாவுக்கு பெரிதும் பொருத்தம் தானே!