உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிராமி எழுத்துக்களுடன் கூடிய சுடுமண் தாங்கி கண்டுபிடிப்பு

பிராமி எழுத்துக்களுடன் கூடிய சுடுமண் தாங்கி கண்டுபிடிப்பு

கோவை: பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களுடன் கூடிய, சுடுமண் தாங்கி உள்ளிட்ட அரிய தொல்லியல் பொருட்கள், கோவையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோவை, பெரியதடாகம், நத்தம் ஊர்காடு பகுதியில் வசிக்கும் சரஸ்வதி அம்மாள், தன் விவசாய நிலத்தில் செங்கல் சூளைக்காக மண் தோண்டினார். அப்போது, பெருங்கற்காலத்தைச் சேர்ந்த சுடுமண் விளையாட்டு வட்ட சில்லுகள், சிவப்பு - கறுப்பு நிற குறியீடுகளுடன் கூடிய மண்பாண்ட சில்லுகள் இருப்பது தெரிய வந்தது.அவர் அளித்த தகவலின்பேரில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியின், கல்வெட்டியல் துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், சுடுமண் காதணிகள், சிறுவர்களுக்கான முதுமக்கள் தாழி மற்றும் பிராமி எழுத்துக்களுடன் கூடிய, தாங்கி ஆகிய அரிய தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. அவற்றை மீட்டு, ஆய்வுக்கு உட் படுத்தியுள்ளனர்.

பி.எஸ்.ஜி., கல்லுாரி கல்வெட்டியல் துறை தலைவர், ரவி கூறியதாவது: கொங்கு மண்டல பகுதிகளில், பல்வேறு தொல்லியல் பொருட்கள் புதைந்துள்ளன. தற்போது மேல்கொங்கு பகுதியில் சுடுமண் காதணி, விளையாட்டு வட்ட சில்லுகள், சிவப்பு - கறுப்பு நிறத்திலான மண்பாண்ட பொருட்களின் சில்லுகள், ஆடவர் பயன்படுத்தும் புகைப்பான் ஆகியவை கண்டுபிடித்துள்ளோம். குறிப்பாக, தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய சுடுமண் தாங்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிராமி எழுத்துக்களில், தவசாத்தன் என எழுதப்பட்டுள்ளது. ஒரு சில ஆய்வாளர்கள் இதை, தேவசாத்தன் என்றும், அவசாத்தன் என்றும் கூறுகின்றனர். இதிலுள்ள, ன் என்ற பிராமி எழுத்து, வலது பக்க வளைவுக்கு பதிலாக, இடது பக்கம் வளைந்து எழுதப்பட்டுள்ளது. இது சார்ந்த ஆய்வு கல்வெட்டுகளுடன், ஒப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுடுமண் தாங்கிகள் கல்வட்டம், கல்பதுக்கைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு மேற்கொள்ளப்படும் சடங்குகளில், அவர்கள் பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் கல்பதுக்கைக்குள் வைப்பது, பழங்கால மக்களின் வழக்கம். கல்பதுக்கையிலிருந்தே, இப்பொருட்கள் கிடைத்துள்ளன.கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாங்கி சிறிய பொருட்களின் சுமைகளை தாங்கும் வகையில், சிறிய அளவில் உள்ளது. இவ்வாறு ரவி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !