உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களைகட்டுகிறது ஏழூர் அம்மன் சப்பரத் திருவிழா

களைகட்டுகிறது ஏழூர் அம்மன் சப்பரத் திருவிழா

மதுரை: சமூக வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் ஏழூர் அம்மன் சப்பரத் திருவிழா இன்று(நவ.,8) துவங்குகிறது.டி.கல்லுப்பட்டி பகுதியில் 600 ஆண்டுகளுக்கு முன் பஞ்சம் ஏற்பட்டது. ஆந்திராவிலிருந்து ஒரு மூதாட்டி தனது 6 பெண் குழந்தைகளை காவடியில் சுமந்தவாறு, டி.கல்லுப்பட்டி வந்தார். கிராம தலைவராக இருந்த ராவ் (ராயர்) வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு உபசரித்து, அடைக்கலம் அளித்தனர். அப்பகுதியில் மழை பெய்து வறுமை, நோய்கள் நீங்கின.

ஒருநாள் மூதாட்டி, எங்களுக்கு அசைவ உணவு வேண்டும், என்றார். ராவ், நாங்கள் சைவம் சாப்பிடுபவர்கள், எனக்கூறி அதே ஊரின் மற்றொரு தலைவராக இருந்த நாயக்கர் வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்றார். அங்கு வரகு அரிசி சோறு, ஆட்டுக்குடல் குழம்புடன் உபசரித்தனர். அதே வீட்டில் மூதாட்டி குழந்தைகளுடன் வசித்தார். பெண் குழந்தைகள் பருவ வயதை அடைந்ததும், வரன் தேட நாயக்கர் ஏற்பாடு செய்தார்.மூதாட்டி மற்றும் அவரது பெண் குழந்தைகள், நாங்கள் தெய்வீக பிறவிகள். பூலோகத்தில் எங்கள் கடமை முடிந்ததால் புறப்படுகிறோம். நாங்கள் ஜோதியில் கலந்தபின், எங்கள் சாம்பலை அருகிலுள்ள கிராமங்களில் துாவுங்கள். ஏழு ஊர்களில் ஆதிபராசக்தியின் வடிவமாக புகுவோம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டில் பிறப்போம். மக்களின் குறைகளை தீர்ப்போம், எனக்கூறி ஜோதியில் கலந்ததாக (தீக்குளித்ததாக) ஐதீகம்.

இதன் நினைவாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐப்பசி பவுர்ணமியின்போது டி.கல்லுப்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழாவை ஏழு கிராம மக்கள் இணைந்து ஏழூர் அம்மன் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.இந்த அம்மனை தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தி, டி.கல்லுப்பட்டி- சரஸ்வதி, வன்னிவேலம்பட்டி-மகாலட்சுமி, வை.அம்மாபட்டி- பைரவி, காடனேரி-திரிபுரசுந்தரி, கிளாங்குளம்-சபரி, கி.சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாக வழிபடுகின்றனர்.  ஏழூர் அம்மன் திருவிழா இன்று துவங்குகிறது. இதற்காக ஒருவாரத்திற்கு முன்பே அம்மாபட்டியைத் தவிர மற்ற கிராமங்களில் மரக்கட்டைகள், வண்ண ஜரிகை காகிதங்களைக் கொண்டு 35 முதல் 40 அடி உயரத்தில் சப்பரங்களை வடிவமைத்து அலங்கரிக்கும் பணி துவங்கியது. கிராம கட்டுப்பாட்டின்படி, வீட்டிற்கு ஒருவர் தானாக முன்வந்து அர்ப்பணிப்புடன் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கூலி இல்லை.

சப்பரங்களை நவ.,10 காலை தலைச்சுமையாக பல கிலோ மீட்டர் துாரம் சுமந்து, அம்மாபட்டிக்கு கொண்டு வருவர். அங்கு பச்சை மண்ணால் வடிவமைக்கப்பட்ட ஏழு அம்மன்களும் தோன்றி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஏழு கிராம மக்களும் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் வெற்றிலை, பாக்கை பரிமாறிக் கொள்வர். பின் அவரவர் ஊர்களுக்கு சப்பரங்களை சுமந்து செல்வர். பெரும்பாலான ஊர்களில் திருவிழாவின்போது தேர்களை வடம் பிடித்து இழுப்பர் அல்லது மோட்டார் பொருத்திய சக்கரங்கள் மூலம் உருட்டிச் செல்வர். இந்த கணினி யுகத்திலும் காடு, மேடுகள் வழியாக சுமந்து வருவதே இத்திருவிழாவின் தனிச்சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !