பவளகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள பவளகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை பவழக்குன்று மலையில் அமர்ந்த பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து தவமிருந்து இடபாகம் பெற்றார் என, தல புராணங்கள் கூறுகின்றன. இங்கு முக்தாம்பிகை சமேத பவளகிரீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இவை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது ரமணர் ஆசிரமம் சார்பில், 8 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், மற்றும் யாக சாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, யாகசாலையில் வைக்கப்பட்ட கும்ப கலச நீரை கொண்டு சுவாமி கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், இசை அமைப்பாளர் இளையராஜா, கார்த்திக்ராஜா, ரமணர் ஆசிரம நிர்வாகிகள் வேங்கடரமணன், மணி, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.