சின்னநெகமம் மாரியம்மன் கோவில் திருவிழா
பொள்ளாச்சி: சின்னநெகமம் மாரியம்மன் கோவில் திருவிழா இன்று கோலாகலமாக துவங்குகிறது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்டது சின்னநெகமம். பெரிய நெகமத்துக்கு அடுத்துள்ள இக்கிராமத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, மாரியம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்படுகிறது. பெரியநெகமம், சின்னேரிபாளையம், ரங்கம்புதுார், காளியப்பம்பாளையம், உதவிபாளையம், சின்னநெகமம், அய்யம்பாளையம் ஆகிய,7 கிராமங்களிலும் இத்திருவிழா நடக்கிறது. இன்று நள்ளிரவு, 12 மணிக்கு மேல், அதிகாலை வரை பல்வேறு கோரிக்கைகளுக்காக பக்தர்கள் கோவிலைச்சுற்றி அங்கபிரதட்சணம் செய்கின்றனர். நாளை புதன்கிழமை மாவிளக்கு ஊர்வலமும், அலகு குத்துதலும் நடக்கிறது. கடைசி நாளன்று சிறப்பு பூஜையுடன் மஞ்சள் நீராடலும், அம்மன் ஊர்வலமும் நடக்கிறது. மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் 7 கிராம மக்கள் மட்டுமன்றி, சுற்றுப்பகுதி கிராம மக்களும் பங்கேற்கின்றனர்.