ஈரோடு கோவிலில் விஜயதசமி விழா
ஈரோடு: ஈரோடு கோவில்களில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நவராத்திரி விழா செப்டம்பர் 28ல் துவங்கியது. நவராத்திரியின் எட்டாவது நாளான அக்டோபர் 5ம் தேதி, சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்பட்டது. ஒன்பதாவது நாளான நேற்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.நவராத்திரியை முன்னிட்டு, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் ஒன்பது நாளும், குமரி வடிவத்திலும், ராஜராஜேஸ்வரி, கல்யாணி, ஜெயதுர்க்கை, துர்க்கை, சண்டிகாதேவி, சாம்பவி தேவி, சுபத்திரைதேவி, காமேஸ்வரி உள்ளிட்ட வடிவங்களில் அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நவராத்திரியின் பத்தாம் நாளில் அம்பாள், மகிஷாசுரனை அழித்த தினமாகவும், விஜயதசமியாகவும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும், அன்றைய தினம் பராசக்தி வடிவான அம்பாள், சிவனுடன் ஐக்கியமாகி, அர்த்தனாரீஸ்வரர் தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்று கூறப்படுகிறது. நேற்று விஜயதசமியையொட்டி, ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.