உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறிச்சியில் களப்பலியுடன் அரவான் திருவிழா நிறைவு!

குறிச்சியில் களப்பலியுடன் அரவான் திருவிழா நிறைவு!

குறிச்சி: கோவை, குறிச்சியில் அரவான் திருவிழா, நேற்று திருவீதி உலா மற்றும் களப்பலியுடன் நிறைவடைந்தது. குறிச்சியில் அனைத்து  சமூகத்தார் சார்பில் நடத்தப்படும் அரவான் திருவிழா கடந்த, 8ம் தேதி முதுப்பார் கோவிலில் பூஜையுடன் துவங்கியது. 16ல் அரவான்  எழுந்தருளுதலும், குறிச்சி குளக்கரை விநாயகர் கோவிலில் தீர்த்தமாடி, சிறப்பு வழிபாடுடன், அரவான் கோவிலை சென்றடைதலும்  நடந்தன.

இரவு, அரவான் – பொங்கியம்மன் திருமண விழாவும், மறுநாள் நாதஸ்வர கச்சேரியுடன் முக்கிய விழாவும் துவங்கின. இரவு, குளக்கரை  கற்பக விநாயகர் கோவிலில், சிறப்பு சீர்முறை வழிபாடு முடித்து, அரவான் புறப்படுதல் நடந்தது. நேற்று காலை, மண் முகம்  அமைக்கப்பட்ட அரவான், பொங்கியம்மன், அனுமார் உடன் குறிச்சியிலிருந்து பொள்ளாச்சி மெயின் ரோடு வழியாக, சுந்தராபுரம் நான்கு  ரோடு சந்திப்பு அருகேயுள்ள அரவான் மேடையை மாலை, 5:45 மணிக்கு வீதியுலாவாக வந்தடைந்தார். பல்வேறு சமூக பெரியவர்களின்  வீடுகளிலிருந்து தேங்காய், பழ தட்டு கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு, 7:30 மணியளவில், பல்வேறு மேடைகளில் அரவானுக்கு வழிபாடு முடிந்து, களப்பலி மேடையான, தேவேந்திர குல வேளாளர் சமூக மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு, அனைத்து சமூக பெரியதனக்காரர்கள் முன்னிலையில், வெளியூர் நபர்கள் வெளியேற்றப்பட்ட பின், அரவான் களப்பலி கொடுக்கப்பட்டார். திரளான மக்கள் பங்கேற்று, அரவான், பொங்கியம்மனை வழிபட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !