தீப விழா தரிசன டிக்கெட்டுகள் போலியை தடுக்க பார் கோடு
வேலுார்: அண்ணாமலையார் கோவிலில், தீபத் திருவிழா தரிசன டிக்கெட்டுகளில், போலிகளை தடுக்க, பார் கோடு அடையாளத்தை பிரின்ட் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, டிச., 12ல் நடக்கிறது. அன்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக, நான்கு ஆண்டுகளாக பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்துக்கு முக்கிய பிரமுகர் களுக்கான அனுமதி அட்டை, பொது தரிசன அட்டை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், அதிகாலை பரணி தீபத்துக்கு, 3,000 பேரும், மகா தீபத்துக்கு 7,000 பேரும், கோவிலுக்குள் அனுமதிப்பட்டனர்.
கோவிலுக்குள் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகாலையில் பரணி தீபம், மாலையில் மகா தீபத்துக்கு, கட்டண தரிசனத்தில், 2,500 பேரை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, 500 - 600 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் விற்பனை செய்ய, கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.இலவச அனுமதி அட்டை ரத்து செய்யப்படுவதால், கட்டண தரிசன டிக்கெட்டுக்கு தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, கட்டண தரிசன டிக்கெட்டில், கலர் ஜெராக்ஸ் மற்றும் போலியாக அச்சிட்ட டிக்கெட்டுகள் ஊடுருவியது கண்டறியப்பட்டது. இதை தடுக்க, இந்த ஆண்டு கட்டண தரிசன டிக்கெட்டில், மின்னணு இயந்திரத்தால், ஸ்கேன் செய்யும், பார் கோடு அடையாளத்தை பிரின்ட் செய்ய, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.