சிவலோகநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :3283 days ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், காலபைரவருக்கு சிறப்பு அலங்கார அபிசேக பூஜைகள் நடந்தது. சிவலோகநாதர் கோவிலில், நேற்று முன்தினம் காலபைரவர் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி வந்த தேய்பிறை அஷ்டமியன்று, கால பைரவருக்கு மாலை 5.00 மணியளவில், பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், அரிசி மாவு போன்றவைகளால் அபிசேக பூஜை நடந்தது. பின், கால பைரவருக்கு, ரோஜா, வடை போன்ற மாலைகள் சாத்தப்பட்டது. பின், சிவலோகநாதர், சிவலோகநாயகி, முருகன் ஆகியோருக்கு பூஜை செய்த பின், காலபைரவருக்கு அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பூசணி, எலுமிச்சை, கார்த்திகை போன்றவைகளில் விளக்கு வைத்து கால பைரவரை வழிப்பட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.