உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புதிய கொடி மரம் அமைக்க முடிவு

நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புதிய கொடி மரம் அமைக்க முடிவு

திருவிடந்தை: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், புதிய கொடி மரம் அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில், 62ம் தலமாக விளங்குகிறது. இக்கோவிலில், அகிலவல்லி தாயாருடன், மூலவர் ஆதிவராக பெருமாள்; கோமளவல்லி தாயாருடன், உற்சவர் நித்ய கல்யாண பெருமாள் ஆகியோர் வீற்றுள்ளனர். திருமணம், மகப்பேறு உள்ளிட்ட தோஷங்களுக்கு, பரிகார தலமாக பிரசித்திபெற்றது. இக்கோவிலை, தமிழக இந்து சமய அறநிலையத்துறை வழிபாட்டு அடிப்படையிலும், இந்திய தொல்லியல் துறை, பாரம்பரிய கோவில் அடிப்படையிலும் நிர்வகித்து வருகின்றன. அறநிலையத்துறை சார்பில், 2006ம் ஆண்டு, திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2018ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்.

இந்நிலையில், கோவில் சுவர் உள்ளிட்டவற்றை ரசாயன பூச்சு மூலம் துாய்மை, மகா மண்டப மேல்தள சீரமைப்பு என, தொல்லியல் துறை பணிகள் மேற்கொண்டதால், அப்பணிகளை திருப்பணியாக கருதி, 2014 டிசம்பரில் பாலாலயம் செய்யப்பட்டது. இப்பணிகள் முடிந்ததும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்துள்ள அறநிலையத்துறை, புதிய கொடி மரம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. தற்போதைய கொடி மரம், 12 ஆண்டுகளுக்கு முன், சரியாக உலர வைக்கப்படாமல், ஈரத்தன்மையுடன் அமைக்கப்பட்டது. நாளடைவில் மரம் உலர்ந்து, அதன் சுற்றளவு சுருங்கி, ஆகம குறைபாடாக மாறியது. இக்குறையை தவிர்க்க, புதிய கொடி மரம் அமைக்க முடிவெடுத்துள்ள அறநிலையத்துறை, 50 அடி உயரம், 5 - 7 அடி சுற்றளவு கொண்ட, முற்றிலும் உலர்ந்த, கேரள வன தேக்குமர கட்டையை எதிர்பார்த்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !