சிதைந்து சின்னாபின்னமாகும் பாரம்பரிய சின்னங்கள்!
கோவை: உலக மரபுவாரவிழா, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19– 25ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தில், வரலாற்று சிறப்புமிக்க அடையாளங்கள், பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், சேர, சோழ, பாண்டிய நாட்டை போல, கொங்கு நாட்டிலும், ஏராளமான இயற்கை வளங்கள் இருந்தன. இங்குள்ள, மேற்குத் தொடர்ச்சி மலையை, பாரம்பரிய சின்னமாக, யுனெஸ்கோ’ அங்கீகரித்துள்ளது. கொங்கு நாட்டில், ரோமானியர்களுடன் வணிக தொடர்பு இருந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. ரோமானிய நாட்டு பொற்காசுகளில், 70 சதவீதம் வரை, கோவையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய கோவில்கள் கொண்ட கோவை மாவட்டத்தில், பண்டைய கல்வெட்டுகள், ஓவியங்கள் சிதைக்கப்பட்டு வருவது, தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது.
* க.க.சாவடி அருகே, குமிட்டிபதி என்ற மலை கிராமத்தில், கிட்டத்தட்ட 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, இரு குகை ஓவியங்கள் உள்ளன. மனிதன், யானை, மயில், தேர் என, வெள்ளை நிறத்திலான, 10 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மிருகங்களின் கொழுப்பை, குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடுபடுத்தி, அதன் எலும்பு துாள், தாவரங்களின் சாயம் கொண்டு, இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கலாம் என, தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய பாரம்பரியமிக்க ஓவியத்தின் மேல், கல்லால் எழுதுவது, கிறுக்குவது, கரித்துண்டுகளால் வரைவதால், ஓவியத்தின் தன்மை சிதைந்துவருகிறது.
* பெரிய தடாகத்தில், பெருங்கற்கால சின்னமான, முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், செங்கல் சூளைக்காக, குழி தோண்டிய போது, ஏராளமாக முதுமக்கள் தாழிகள், உடைந்த நிலையில் வீசி எறியப்பட்டுள்ளன. இங்கு அகழாய்வு செய்தால், அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
* அன்னுார், கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், 12–15ம் நுாற்றாண்டு வரையுள்ள காலத்தை சேர்ந்த, 29 கல்வெட்டுகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. தற்போது அக்கோவிலில் ஒரு கல்வெட்டு கூட இல்லை. கோவிலை புனரமைக்கும் போது, சில கல்வெட்டுகளை படிக்கற்களாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
* டவுன்ஹால், கோட்டை மேடு பகுதியில் உள்ள, சங்கமேஸ்வரர் கோவிலில், 13ம் நுாற்றாண்டு காலத்து, ஒன்பது கல்வெட்டுகள் இருந்தன. தற்போது, சில கல்வெட்டுகள் மாயமாகிவிட்டன. அக்கோவிலில் தான், பேரூர் நாடார் கோவன்புதுாரான வீர கேரள நல்லு ார்’ என, எழுதப்பட்ட கல்வெட்டு இருந்தது. இதில் குறிப்பிட்டுள்ள கோவன்புதுார், கோயமுத்துாராக மருவியதற்கான சான்று, இக்கல்வெட்டு தான்.
* வெள்ளலுார், தேனீஸ்வரர் கோவிலில், 10ம் நுாற்றாண்டு காலத்து, ஐந்து கல்வெட்டுகள் இருந்தன. இதில், ஒரு கல்வெட்டு மட்டும், ராமநாதபுரத்தில் உள்ள, தொல்லியல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மற்ற நான்கு கல்வெட்டுகள் மாயமாகிவிட்டன. மாயமான கல்வெட்டுகளில், வட்டெழுத்துகள் இருந்ததாக சான்றுகள் உள்ளன. இப்படி, பல்வேறு பாரம்பரிய அடையாளங்கள் சிதைக்கப்படுகின்றன. மேலே குறிப்பிட்ட தகவல்கள், உதாரணங்கள் மட்டுமே. கொங்கு நாட்டு அடையாளங்களை பாதுகாக்க, மக்கள் முன்வர வேண்டும். பாரம்பரிய கோவில்களில், புரனமைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது, இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில், தொல்லியல் ஆய்வாளர்களின் ஆலோசனைபடி, சீரமைக்கலாம். இதன்மூலம், பழங்கால பொக்கிஷங்கள் மாயமாவது, சிதைக்கப்படுவது தடுக்கப்படும். கல்வெட்டு ஆய்வாளர் ஜெகதீசன் கூறுகையில், கொங்கு மண்ணில், எக்கச்சக்க பழங்கால கல்வெட்டுகள், முறையாக பராமரிக்காமல் சிதைந்து போய்விட்டன. சிங்காநல்லுார், உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள, 9ம் நுாற்றாண்டு காலத்து, பெருமாள் ஐம்பொன் சிலை உள்ளது. இந்த பழமையான சிலை, உலகில் எங்கும் காணக்கிடைக்காத அளவுக்கு, வரலாற்று சிறப்புமிக்கது. பாரம்பரிய கோவில்களில் உள்ள கற்சிலை, ஐம்பொன் சிலைகளின் முக்கியத்துவத்தை, மக்களுக்கு புரிய வைத்து, உரிய பாதுகாப்புடன் பேண வேண்டியது அவசியம். அவிநாசி, தேவூரில், 13ம் நுாற்றாண்டு காலத்து, பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளை, இயந்திரம் கொண்டு பெயர்த்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்,” என்றார்.