புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை திருவந்திபுரத்திற்கு சிறப்பு பஸ்கள்
கடலூர் : திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையில் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றான கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையான இன்று அதிகாலை 2.45 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
நான்கு மணி முதல் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். மூலவர் தேவநாத பெருமாள் ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். சுவாமியை தரிசனம் செய்ய தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு குடிநீர் வசதி மற்றும் போலீஸ் பாதுகாப்பும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. புரட்டாசி முதல் தேதியில் இருந்து நேற்று வரை ஒன்றரை லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.