ஜவ்வாது மலையில் மழை வேண்டி நெல்லி மரத்திற்கு பூஜை
திருவண்ணாமலை: ஜவ்வாது மலையில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், வனப்பகுதியில் உள்ள நெல்லி மரத்திற்கு, 15வது ஆண்டாக சிறப்பு பூஜை செய்து, பொதுமக்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடிவாரத்தில், விநாயகர் மற்றும் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. கோவிலில் இருந்து மலை மீது ஒரு கி.மீ., வனப்பகுதியில், பழமை வாய்ந்த நெல்லி மரம் உள்ளது. இதற்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினால், மழை பெய்யும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.கடந்த, 15 ஆண்டுகளாக நெல்லி மரத்திற்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆர்ய சமாஜம் சார்பில், சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், நேற்று முன்தினம், மாலை உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும், நெல்லிமரத்திற்கு வேத விற்பன்னர்கள் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்தனர்.இதில், போளூர் மற்றும் ஜவ்வாது மலையை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஒப்பாரி வழிபாடு : திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், அங்குள்ள ஏரிக்கரையில் மன்மதன் கொடும்பாவியை நேற்று எரித்து, ஒப்பாரி வைத்து, நுாதன வழிபாடு நடத்தினர். இது குறித்து, அப்பகுதி பெண்கள் கூறியதாவது: மழை பெய்வதற்கு காரணமாக உள்ள வருண பகவான், தற்போது மன்மதன் பிடியில் சிக்கி, மக்களியாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். வருண பகவானை மழை பெய்ய விடாமல், மன்மதன் தடுத்து வருகிறார். அதனால், அவரின் கொடும்பாவியை எரித்து, ஒப்பாரி வைத்து வழிபட்டோம். இதனால், வருண பகவானை தன் பிடியில் இருந்து மன்மதன் விடுவித்து, மழை பெய்ய வைப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.