அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தேவம்பாடி வலசு கிராமத்தில், கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பொள்ளாச்சி அருகே தேவம்பாடிவலசில், கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சித்தி விநாயகர், பாலமுருகன், மாகாளியம்மன் கோவில்களும் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 24ம் தேதி மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, பிள்ளையார், நிலமகள் வழிபாடு நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, இரண்டு நாட்கள் மூன்று கால யாக பூஜைகள், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. நேற்றுமுன்தினம் காலை 5:30 மணிக்கு நான்காம் கால வேள்வியுடன் விழா துவங்கியது. காலை 7:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின், காலை 7:45 மணிக்கு மூல மூர்த்திகள் திருக்குட நன்னீராட்டு, அருளாளர் உரை, பதின் மங்கலக்காட்சி, பெருந்திருமஞ்சனம், அன்னதானம் நடைபெற்றது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.