உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை உண்டியலில் கட்டு, கட்டாக ரூபாய் நோட்டுகள், வெள்ளி கட்டிகள்

திருவண்ணாமலை உண்டியலில் கட்டு, கட்டாக ரூபாய் நோட்டுகள், வெள்ளி கட்டிகள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் அன்னதான உண்டியலில், கட்டுக்கட்டாக, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளும், வெள்ளி கட்டிகளும் இருந்தன. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி நாளில், லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்வர். கோவிலில், பக்தர்கள் நேர்த்திக் கடனாக காணிக்கை செலுத்த தனி உண்டியலும், அன்னதானம் செலுத்த விரும்புவோருக்கு தனி உண்டியலும் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் தனித்தனியே மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று மாலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்தி தீப தரிசன மண்டபத்தில், அன்னதான உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில், கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா முன்னிலையில், 20க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியலில், செல்லாத, 500 ரூபாய் நோட்டுகள், 18 கட்டும், 1,000 ரூபாய் நோட்டுகள், எட்டு கட்டுகளும் இருந்தன. மேலும் உதிரியாக, 500 ரூபாய் நோட்டுகள், 42 இருந்தன. மொத்தம், 17 லட்சத்து, 70ஆயிரத்து, 514 ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. மேலும், தலா, ஒரு கிலோ வீதம், ஐந்து கிலோ வெள்ளி கட்டிகளும், 88 கிராம் உதிரி வெள்ளி நகைகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !