கடவுள் பெயரில் ரேஷன் கார்டு: பூஜாரியின் மோசடி அம்பலம்
ஜெய்ப்பூர்: கடவுள் கிருஷ்ணர் பெயரில் ரேஷன் கார்டு பெற்ற பூஜாரி, ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கியது, அம்பலமாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான ஆட்சி நடக்கிறது. பாரான் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் பாபுலால், 70. இவர், மாதந்தோறும் தன் ரேஷன் கார்டுடன், முரளி மனோகர், 70, என்ற பெயரில் உள்ள ரேஷன் கார்டையும் பயன்படுத்தி, ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வந்தார்.
மேலும், முரளி மனோகரின் குடும்ப உறுப்பினர்களாக, மனைவி டகுரானி, 65, மகன் கணேஷ்,35, ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. வீட்டு முகவரியாக, கோவிலின் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. பாபுலால் போலியான பெயரில் ரேஷன் கார்டு பெற்று பொருட்கள் வாங்குவதாக, மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரிக்கு புகார்கள் வந்தன. காகித வடிவிலான குடும்ப அட்டைக்கு பதில், ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டத்தை மத்திய உணவுப் பொருள் பாதுகாப்பு துறை அறிமுகப்படுத்தியது. இதற்கு தேவையான கருவிழி மற்றும் விரல் ரேகை பதிவுகள், ஆதார் அட்டையில் இருப்பதால், ரேஷன் கார்டுடன், ஆதார் அட்டை இணைக்கும் பணி நடந்து வருகிறது. பாபுலால் மீது வந்த புகாரையடுத்து, முரளி மனோகர் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து வரும்படி, பாபுலாலுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பியதையடுத்து, தன் மோசடியை பாபுலால் ஒப்புக்கொண்டார். கடவுள் கிருஷ்ணரின் மற்றொரு பெயரான, முரளி மனோகர் என்ற பெயரில், போலியாக ஒரு ரேஷன் கார்டை வாங்கியிருந்ததை, அவர் ஒப்புக் கொண்டார். இதுகுறித்து, பாபுலாலிடம், அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.