கோவிலில் உண்டியலுக்கு பதிலாக ஸ்வைப் இயந்திரம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில், உண்டியலில் ரொக்கமாக பணம் செலுத்த முடியாத பக்தர்களின் வசதிக்காக, ஸ்வைப் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த ரமண் சிங் முதல்வராக உள்ளார். இங்கு, ராய்ப்பூரில் உள்ள, பஞ்சாரி அம்மன் கோவிலில், உண்டியலுக்கு அருகில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை, ஸ்வைப் செய்யும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகி ஹரீஷ் பாய் ஜோஷி கூறியதாவது: வங்கிகளில் பணம் பெறுவதற்கு கட்டுப்பாடு மற்றும் நீண்ட வரிசை காரணமாக, மக்கள் கையில் தாராளமான பணப்புழக்கம் இல்லை. இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்த முடியாமல் மன வருத்தத்துடன் செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் காணிக்கை செலுத்துவதற்காக, ஸ்வைப் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.