திருவண்ணாமலை தீப திருவிழா: நாளை தேரோட்டம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவில், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டத்தில், மஹா ரதத்திற்கு கலசம் பொருத்தப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நாளை பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வருவர். இந்த தேரை இழுத்துச் செல்ல, 150 மீட்டர் நீளமுள்ள, 2 டன் எடையுள்ள இரும்பு சங்கிலி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சுவாமி வீதி உலா வரும், 63 அடி உயர மஹா ரதத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கலசம் பொருத்தும் பணி நடந்தது. இதை தொடர்ந்து, மற்ற தேர்களிலும் கலசம் பொருத்தப்பட உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு, மஹா ரதம் அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது.தீப திருவிழாவுக்காக, ஆந்திர மாநிலத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வருவர். இவர்கள் வசதிக்காக, 100 ஆந்திர மாநில அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வரும், 11ம் தேதி காலை, 8:00 மணியில் இருந்து, 13ம் தேதி வரை இயக்கப்படுகின்றன.