துர்க்கையம்மன் சிலையை கடத்திய 3 பேர் கைது
செங்குன்றம்: துர்க்கையம்மன் சிலையை, காரில் கடத்திய மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை செங்குன்றம் அருகே, திருவள்ளூர் கூட்டுச்சாலையில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணி அளவில், செங்குன்றம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேகமாக சென்ற சொகுசு காரை நிறுத்த முயன்றனர். ஆனால், கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து, செங்குன்றம் புறவழிச்சாலை சந்திப்பு வரை, விரட்டி சென்று காரை மடக்கினர். சோதனையில், சிம்ம வாகனத்தில் துர்க்கையம்மன் அமர்ந்திருக்கும், 2 அடி உயர வெண்கல சிலை, கார் இருக்கைக்கு அடியில் இருந்தது. காரை ஓட்டி வந்த அலமாதி, புதுக்குப்பம் சதீஷ்குமார், 23, அதே பகுதியைச் சேர்ந்த, 17 வயது இளைஞர் மற்றும் விளாங்காடுபாக்கம், மல்லிமாநகர் ஜெபக்குமார், 23, ஆகியோரை கைது செய்த போலீசார், சிலை மற்றும் காரை பறிமுதல் செய்து, மேலும் விசாரிக்கின்றனர்.