திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மகா தீபம்: இன்று தீர்த்த உற்சவம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் நேற்று காலை தேரோட்டமும், மாலையில் மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர். இன்று தீர்த்த உற்சவம் நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க அங்கி அலங்காரத்தில், 16 கால் மண்டபம் அருகே வைரத்தேரில் எழுந்தருள, தேரோட்டம் நடந்தது.
கார்த்திகை தீபம்: கோயிலுக்குள் அனுக்ஞை விநாயகர் முன்பு மாலை 5:00 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதே நேரத்தில் மலைமேல் தீப மண்டபம் அருகிலுள்ள உச்சிப்பிள்ளையார் முன்பு கும்பங்களில் புனிதநீர் நிரப்பி வைத்து, விநாயகர் பூஜை, அக்னி லிங்க பூஜை, வர்ண பூஜைகள், தீபாராதனைகள் முடிந்து, தீப கொப்பரையில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. கோயிலுக்குள் மூலவர்கள் சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பாலதீபம் ஏற்றப்பட்டது. கோயில் மணி அடிக்கப்பட்டதும், மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. மூலவர் முன் மூன்று முறை பாலதீபம் ஆர்த்தி நடந்தது. இரவு தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி 16கால் மண்டபம் முன்பு எழுந்தருளினர். அங்கு சொக்கப்பனை முடிந்து வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி அருள்பாலித்தார்.
அழகர்கோவில்: சோலைமலை முருகன் கோயிலில் கார்த்திகை மகா தீப திருவிழா நடந்தது. அதிகாலையில் மூலவர் முருகப் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. காலையில் சஷ்டி மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளினார். யாகசாலை பூஜை முடிந்து உற்சவருக்கு பால், சந்தனம், பன்னீர் உட்பட பல்வேறு வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடந்தது. மூலவர் முருகப் பெருமான் தங்க அங்கி, வைர வேலுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகலில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. மாலையில் கோயிலில் மகா தீபம் ஏற்றினர். பின் கோயில்வாசல் முன் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
பாலமேடு: அனைத்து சமுதாயத்தினர் சார்பில் வடக்கு தெரு கிராமத்தினர் செல்லாயி அம்மன், நாடார் தெருவை சேர்ந்தவர்கள் மாரியம்மன், நாயுடு தெருவினர் முத்தாலம்மன், பாறைக்கல் தெருவினர் கருப்புசாமி கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றினர். தொடர்ந்து மஞ்சமலை ஆற்றில் பச்சை பனை மரம் ஊன்றி சொக்கப்பனை கொளுத்தினர். மேலும். வலையபட்டி மஞ்ச மலையான், சத்திரவெள்ளாலபட்டி மலைக்கோயில்களில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
அலங்காநல்லுார்: ஐயப்பன் கோயிலில் உள்ள கல்யாண முருகன், தெப்பக்குளம் கார்த்திகை முருகன், வெள்ளிமலை ராஜலிங்கேஸ்வரர், புதுப்பட்டி கிருஷ்ணன் கோயில், கொண்டையம்பட்டி மலை அடிவாரத்தில் உள்ள முருகன் கோயில் உட்பட கிராமக்கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.