2,668 அடி உயர மலையில் மகா தீபம் : திருவண்ணாமலையில் பக்தர்கள் பரவசம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், 2,668 அடி உயர மலை உச்சியில், நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை, 4:00 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, அனைத்து சன்னதிகளிலும், தீபங்கள் ஏற்றப்பட்டன. மாலை, 4:30 மணிக்கு, பஞ்ச மூர்த்திகள் தங்க கொடி மரத்தின் முன் எழுந்தருளி, தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, 5:59 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடி மரம் முன் எழுந்தருளி, நடனமாடியவாறு பக்தர்களுக்கு, ஒரு நிமிடம் காட்சியளித்தார். அப்போது, காலையில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தின், ஐந்து மடக்கு விளக்குகளையும் கொண்டு வந்து, கொடிமரத்தின் முன் தீபம் ஏற்றப்பட்டது. அதிலிருந்து பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில், ஐந்து தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு, அவற்றை, 2,668 அடி உயர மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும்படி காண்பித்தனர். இதையடுத்து, மாலை 6:00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷங்களுடன், தரிசனம் செய்தனர்.
தீபம் தெரியாமல் பக்தர்கள் ஏமாற்றம் : திருவண்ணாமலையில் நேற்று அதிகாலை முதலே மேக மூட்டத்துடன், சாரல் மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள், 14 கி.மீ., கிரிவலம் சென்றனர். மாலை, 3:00 மணிக்கு பலத்த மழை பெய்ய துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட போது, மழையாலும், பனி மூட்டத்தாலும், தீபம் கீழே இருந்த பக்தர்களுக்கு தெரியவில்லை. மாலை, 7:30 மணி வரை காத்திருந்தும் தீபம் தெரியவில்லை. இதனால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.