உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல், பழநி கோயில்களில் கார்த்திகை தீப திருவிழா

திண்டுக்கல், பழநி கோயில்களில் கார்த்திகை தீப திருவிழா

திண்டுக்கல்: திண்டுக்கல், பழநி கோயில்களில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு கார்த்திகை தீபமும் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள்கோயில், வெள்ளை விநாயகர் கோயில், நாகல்நகர் வரதராஜ பெருமாள்கோயில், பாரதிநகர் புவனேஸ்வரி அம்மன் கோயில், 108 விநாயகர் கோயில் உட்பட பல இடங்களில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

மாலையில் கார்த்திகை: தீபம் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடந்தது. பல இடங்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

வீடுகளில் தீபம்:
வீடுகளின் முன்பு பெண்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர். சிறப்பு பூஜைகளையும் செய்தனர். பல இடங்களில் வாணவேடிக்கையும் நடந்தது.

பழநி: பழநி பழநி மலைக்கோயிலில் பகல் 2 மணிக்கு சண்முகார்ச்சனையும், சண்முகர் தீபாராதனை நடந்தது. வழக்கமாக மாலை 5.30மணி நடைபெறும் சாயரட்சை பூஜை முன்னதாக மாலை 4 மணிக்கு நடந்தது. தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரசுவாமி உட்பிரகாரத்தில் உலாவந்து அதன்பின் தீபஸ்தம்பம் அருகேயுள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமி சன்னதியில் இருந்து பரணி தீபம் எடுத்துவரப்பட்டு உட்பிரகாரத்தின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6.10மணிக்கு மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பனைஓலைகள் அடுக்கிய சொக்கப் பனையில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. திருஆவினனன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. படிப்பாதை, திருஆவினன்குடிகோயில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். கார்த்திகைபொரி, அப்பம் நைவேத்திய பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா செய்தனர்.

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு புதுப்பட்டி, காமராஜர்நகர் தங்கமலை முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இக்கோயில் மலை மீது அமர்ந்துள்ள முருகப் பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தனர். சந்தன காப்பு அலங்காரத்தில் முருகன் காட்சியளித்தார். பூசாரி தீபன் சக்கரவர்த்தி முருகன் சந்நிதி முன்பாக பரணி தீபத்தை அரோகரா கோஷத்துடன் ஏற்றினார். ஊர் பொதுமக்கள், ஆன்மீக அன்பர்கள் பங்கேற்றனர்.

காவடியுடன் கேரள பக்தர்கள்
: கார்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு பழநிகோயிலில் குவிந்த பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயிலில் கார்த்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்தனர். திருஆவினன்குடிகோயில், பாதவிநாயகர் கோயில், நான்குகிரிவீதி கோயில்களிலும் பக்தர்கள் காவடிகள், பால்குடங்கள் எடுத்துவந்தும், கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுசெய்தனர். கேரளாவைச் சேர்ந்த நுõற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

நீண்ட நேரம் காத்திருப்பு:
ரோப்கார் வின்ச் ஸ்டேஷனில் மட்டும் பக்தர்கள் 3 மணி மணிநேரம் வரை காத்திருந்து, மலைக் கோயிலுக்கு சென்றனர். காலையில் சென்ற பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்று மாலையில் கார்த்திகைத் தீபம் ஏற்றுவதை பார்ப்பதற்காக மலையில் அப்படியே தங்கிவிட்டனர். இதனால் மலைக்கோயில் வெளிப்பிரகாரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. பொது தரிசன வழியில் 5மணி நேரம் வரை காத்திருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !