அர்த்தநாரீஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருமலையில், அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில்கள் உள்ளன. இங்கு, கார்த்திகை மாதம் திருவண்ணாமலை தீபதிருவிழாவுக்கு அடுத்த நாள், கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதை முன்னிட்டு, நேற்று அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவப்பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின், கோவில் பிரகாரத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு சுவாமிகள் அருள்பாலித்தனர். தொடந்து, இரவு, 7:00 மணியளவில், சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல், ராசிபுரம் அடுத்த, வடுகம் காளியம்மன் கோவிலில், சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.