உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டிச.25ல் புஷ்கலாதேவி தர்ம சாஸ்தா திருக்கல்யாணம் : ஆரியங்காவில் நடக்கிறது

டிச.25ல் புஷ்கலாதேவி தர்ம சாஸ்தா திருக்கல்யாணம் : ஆரியங்காவில் நடக்கிறது

மதுரை: புஷ்கலாதேவி, ஆரியங்காவு தர்ம சாஸ்தா திருக்கல்யாணம் டிச.,25ல் நடக்கிறது.கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா சுவாமிக்கும் புஷ்கலா தேவிக்கும் சாஸ்திர சம்பிரதாய முறைப்படி ஜோதிரூப தரிசனம், நிச்சயதார்த்த விழாவான பாண்டியன் முடிப்பு, திருக்கல்யாணம், மண்டலாபிஷேக விழாக்கள் ஆண்டு தோறும் டிசம்பரில் நடக்கிறது.தர்மசாஸ்தா, சவுராஷ்டிரா சமுதாயத்தை சேர்ந்த புஷ்கலாதேவியை மணந்து ஆரியங்காவில் அன்னதான பிரபுவாக அருள் பாலிக்கிறார். இதனால் திருவாங்கூர் மன்னர் மற்றும் தேவஸ்தானம் போர்டு சார்பில், சவுராஷ்டிரா மக்களை சம்பந்தி முறையில் அழைப்பிதழ் அனுப்பி கவுரவிப்பதன் மூலம், சவுராஷ்டிரா சமுதாயத்தினர் ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மஹாஜன சங்கம், மதுரை என்ற அமைப்பை ஏற்படுத்தி சம்பந்தி உறவுமுறை கொண்டாடி திருக்கல்யாணத்தை இரு வீட்டாரும் நடத்தி வருகின்றனர். இந்தாண்டு விழா டிச.,23ல் துவங்கி 27 வரை நடக்கிறது.

டிச.,23: மாம்பழத்துறையில் மதியம் 2:00 மணிக்கு அம்பாளை ஜோதி வடிவமாக்கி சங்கம் சார்பில் அலங்கார வண்டியில் ஆரியங்காவுக்கு ஊர்வலம் புறப்படுகிறது. மாலை 6:45 மணிக்கு ஆரியன்காவு கோயில் கர்ப்பக்கிரகத்தில் ஐய்யனோடு அம்பாள் ஜோதி வடிவமாக ஐக்கியமாகும்.

டிச.,24: ஆரியங்காவு தர்மசாஸ்தா புஷ்கலா தேவி கோயிலில் பாண்டியன் முடிப்பு எனும் திருக்கல்யாண நிச்சயதார்த்தம் இரவு 8:00 மணிக்கும், முன்னதாக மாலை 4:00 மணிக்கு தாலப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை அழைப்பு நடக்கிறது.

டிச.,25: திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் இரவு 10:00 மணிக்கு நடக்கிறது.

டிச.,27: மண்டல பூஜை நிறைவடைகிறது. ஏற்பாடுகளை ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கத் தலைவர் கே.ஆர்.ராகவன், பொதுச்செயலாளர் எஸ்.ஜெ.ராஜன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !