மங்கையர் நலன்காக்கும்... மார்கழி
ஸ்ரீவில்லிபுத்துார் : நம்முடைய சமயமும், தமிழ்கலாசாரமும் இன்றைய அறிவியலுக்கு முன்னோடியாக விளங்கியதற்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதற்கு பல உதாரணங்கள் இன்றும் இருக்கின்றன. அந்த வகையில் தமிழ் மாதங்களில் மார்கழிக்கு தனிசிறப்பு உண்டு. இந்தமாதம் அறிவியல் உண்மையை, ஆன்மிக நெறி, இறைநினைப்பை வளர்த்தும், உடல் மற்றும் உள்ளத்துாய்மையை அதிகரிக்கசெய்யும் மாதமாகும் என்பதே உண்மை. தனுர் மாதம் என அழைக்கபடும் இம்மார்கழியில் அதிகாலையில் பிரம்மமுகூர்த்த்தில் எழுந்து, குளித்து, வீட்டு வாசலில் மங்களகோலமிட்டு இறைவனை வணங்கினால் நமக்கு கண்நிறைந்த வாழ்க்கை, நோயற்ற நிலை, மனம் விரும்பிய மணாளன், வேதனைகள் தீர்ந்து, வேண்டியவர்களின் வேண்டுதல்களை நிறைவேறச்செய்யும் மாதமாகும்.
மார்கழி 30 நாட்களும் நோன்பிருந்து பாமாலை பாடி, பூமாலை சூடிக்கொடுத்து அரங்கனை ஆண்டாள் ஆட்கொண்ட மாதமிது. கண்ணபிரானுக்குரிய மாதம், தேவர்களுக்கு அதிகாலைப்பொழுது, மாதங்களில் நான் மார்கழி என கீதையில் பகவான் குறிப்பிட்ட மாதமிது. திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்களை தந்த மாதமிது.
நல்ல மணவாளன் கிடைப்பார்: வேதபிரான் அனந்தராமகிருஷ்ணர்: மாதங்களில் நான் மார்கழி என கண்ணன் கீதையில் குறிப்பிடுகிறார். அதனால் தான் அந்த மாதத்தில் ஆண்டாளும் நோன்பிருந்து,அரங்கனின் கைத்தலம் பற்றினார். நமக்கு திருப்பாவை, நாச்சியார் திருமொழி கிடைத்தது. இவ்விரு பாடல்கள் மூலம் அறிவியல் உண்மைகளை, அன்பின் பெருமைகளையும் உணரலாம் மார்கழி மாதத்தில் பெண்கள் நோன்பிருந்து வழிபட்டால் ஆண்டாளுக்கு கிடைத்த அரங்கனைப்போல் ஒவ்வொரு பெண்களுக்கும் நல்ல மணவாளன் கிடைப்பார்கள். அதிகாலை சுத்தமான காற்று பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு வலுசேர்க்கும்.
நினைப்பது நடக்கும்: கீதாஞ்சலி; பெண்களுக்கு உகந்த மாதம் மார்கழி, மற்ற மாதங்களில் பல்வேறு சுபநிகழ்ச்சிகள் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும்போது இறைவனை மட்டுமே நினைக்க செய்யும் மாதம் மார்கழி. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, குளித்து, வீட்டு வாசலில் கோலமிட்டு,கோயிலுக்கு செல்வது பெண்களுக்கு பெருமை சேர்க்கும். நினைப்பது நடக்கும்.
வேண்டுதல்கள் நிறைவேறும்: ஜனனி: மார்கழி மாதம் கார்த்தியாயினி விரதம் இருந்தால் நினைப்பது நிறைவேறும். தினமும் அதிகாலையில் திருப்பாவை பாடல்களை பாடி, தங்கள் வீடுகளில் விளக்கேற்றினால் மங்களகரமாக இருக்கும். வேதனைகள் தீரும். வேண்டுதல்கள் நிறைவேறும்.கல்யாணத்திற்கு மட்டுமில்லை,கல்வி,வேலைவாய்ப்பு, செல்வம்,மனநிம்மதியான வாழ்க்கை என அனைத்து சுபகாரியங்களும் கிட்டும். உடலும், உள்ளமும் துாய்மையாகும்
ஆசிரியை மணிமேகலை: ஆண்டாளின் திருப்பாவை , மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நம் வாழ்வை செம்மைபடுத்தும் செந்தமிழ் பாடல்கள்.தனுர் மாதம் என அழைக்கபடும் இம்மார்கழியில் நோன்பிருந்தால் உடலும், உள்ளமும் துாய்மையாகும். இது இக்கால பெண்களுக்கு மிகவும் அவசியம். மனிதர்களை துாய்மைப்படுத்தும் பக்தி மாதமான மார்கழியில் நீங்காத செல்வமான இறைவனின் திருவருளை பெறுவதே முக்கியம்.