சபரிமலை புண்ணியம் பூங்காவனம் திட்டம் திட்ட அதி்காரி விளக்கம்
சபரிமலை: சபரிமலையில் குப்பபை அள்ளுவது மட்டுமல்லாமல், பக்தர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் புண்ணியம் பூங்காவனம் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அதன் திட்ட அதிகாரி விஜயன் கூறினார். சபரிமலையில் சுகாதர பணிகளுக்காக தேவசம்போர்டு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்கிறது என்பதால் புண்ணியம் பூங்காவனம் திட்டத்துக்கு இந்த ஆண்டு தேவசம்போர்டு தரப்பில் எதிர்ப்பு ஏற்பட்டது. தேவசம்போர்டின் ஒரு உறுப்பினர் நேரடியாக இதை நேரடியாக எதிர்த்தது மட்டுமல்லாமல், இந்த ஆண்டுக்கான தொடக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த ஆண்டு இந்த திட்டம் கடந்த ஆண்டுகளை போல் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இந்த திட்டத்தின் தலைமை அதிகாரி விஜயன் சன்னிதானத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: குப்பைகளை அள்ளி அகற்றுவது மட்டுமல்ல புண்ணியம் பூங்காவனம் திட்டத்தின் நோக்கம். சுவாமி ஐயப்பனின் பூங்காவனத்தை அசுத்தம் செய்யலாமல் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பக்தர்கள் மத்தியில் ஏற்படுத்துவதுதான் இதன் முக்கிய நோக்கம். சபரிமலையில் எது எல்லாம் செய்ய வேண்டாம் என்று தந்திரியும் மேல்சாந்தியும் கூறுகின்றனரோ அதைதான் பக்தர்கள் செய்கின்றனர். அதனால் இல்லாத ஆசாரங்கள் உருவாகிறது. பூஜை பொருட்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் மலைபோல் குவிகிறது. இதை எல்லாம் தடுத்து பக்தர்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். இதற்காக12 மினி ஒலிபெருக்கிகள் மூலம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம். இதுபோல தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அங்குள் புண்ணியம் பூங்காவனம் கிளைகள் மூலம் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். சன்னிதான சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிப்போம் என்று உறுதிமொழியை ஒவ்வொரு பக்தரும் எடுக்க வைக்க வேண்டும் என்பது இந்த திட்டத்தின் மற்றொரு லட்சியம், இதற்காக குருசுவாமிகள் பக்தர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். சன்னிதானத்தில் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்லக்கூடாது என்ற ஒரு நிலையை இந்த திட்டம் ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்ல துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஒரு மரியாதையை இந்த திட்டம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.