விவேகானந்த சேவாலயத்தில் சாரதா தேவி ஜெயந்தி விழா
திருப்பூர்: “மற்றவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்யும் போது, ஆண்டவன் அருள், விரைவாக கிடைக்கும்,” என்று, பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பேசினார். ஸ்ரீசாரதா தேவி ஜெயந்தி விழா மற்றும் குத்துவிளக்கு பூஜை, திருமுருகன்பூண்டி விவேகானந்த சேவாலயத்தில் நேற்று நடந்தது. காலை, 5:00 மணிக்கு மங்கள ஆரத்தி, திருப்பாவை பாராயணம், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடந்தது. மாலையில், குத்துவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள், 108 குத்துவிளக்குகளை வைத்து பூஜித்தனர். தொடர்ந்து, ‘பாரத பண்பாடு’ என்ற தலைப்பில், கோவை பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பேசினார். சேவாலய நிர்வாகி செந்தில்நாதன் வரவேற்றார்.
ஜெயந்தஸ்ரீ பேசியதாவது: ஒவ்வொருவரம் குடும்பம், வீதி, ஊர், சொந்த மாநிலம், தாய்நாடு என்று மட்டுமல்லாது, உலக மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அவர்களுக்காக, நிதி ஒதுக்க தேவையில்லை; சிறிது நேரம் ஒதுக்கி பிரார்த்தனை செய்தாலே போதுமானது. ஒருவர், தனது சுற்றத்தை தாண்டி, மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் போது, ஆண்டவன் அவரது வேண்டுதலுக்கு விரைவாக வரமளிப்பான். சூரியன் அஸ்தமனமான பிறகே, வெளிச்சத்தின் அருமை தெரிகிறது. நோய் வந்த பிறகே, ஆரோக்கியத்தின் அருமை புரிகிறது. ஒவ்வொரு கஷ்டம் வரும் போதும், அதிலிருந்து ஒரு நன்மை கிடைக்கும். காது, கண், மனம் ஆகிய மூன்றும் ஒருநிலைப்பட்டால் மட்டுமே கல்வியறிவை பெற முடியும். கிருஷ்ணர், யுத்த களத்தில்தான் விஸ்வரூபம் எடுத்தார்; ஆனால், திவ்ய நேத்திரம் கிடைத்ததால், அர்ஜூனனுக்கு மட்டுமே, அந்த காட்சி கிட்டியது. அங்கிருந்த மற்ற யாருக்கும் கிடைக்கவில்லை. சரியான பக்குவம் இருந்தால் மட்டுமே விஸ்வரூபத்தை பார்க்க முடியும். கீதையை கேட்க முடியும். மனிதர்களுக்கு தேவையான அனைத்தும், புத்தகங்களில் இருக்கிறது. மாத்திரை எடுத்துக் கொண்டதும் உடல்நலம் சீராகுவது போல். நல்ல கருத்துள்ள புத்தகங்களை படிக்கும் போது தான், ஞானத்தை பெற முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.