உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக பழநி மலையை 1008 முறை கிரிவலம் வரும் தம்பதி!

உலக நன்மைக்காக பழநி மலையை 1008 முறை கிரிவலம் வரும் தம்பதி!

பழநி, உலக நன்மைக்காக பழநி மலைக்கோயில் கிரிவீதியை கணவன்- மனைவி இணைந்து 1008 முறை வலம் வந்தனர். பழநியை சேர்ந்த சமூகசேவகர் ஏ.எம்.தென்றல்,45, அவரது மனைவி ஜோதி,45. இருவரும் புவிவெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். பூமியின் வெப்பத்தை போக்க நிறைய மரங்கள் வளர்த்து குளிர்ந்த சூழ்நிலையை உருவாக்குவோம், மழைநீரை சேமிக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் உலக நன்மைக்காக 2.5 கி.மீ., துாரம் உள்ள பழநி மலைக்கோயில் கிரிவீதியை கடந்த நவ.,15 முதல் ஜன.,1 வரை 1008முறை சுற்றிவந்து பழநியாண்டவரை வேண்டி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

ஜோதிமணி கூறுகையில்,
“அவரவருக்கு 1008 பிரச்னைகள் என்ற நிலையில் வாழ்கின்ற ஒவ்வொருவரின் வலியும், வேதனையும் தீர்ந்து நல்வாழ்வுபெறவேண்டும், மரக்கன்றுகள் நிறைய நட்டு பராமரிக்கவேண்டும். வருங்கால சந்ததிகளுக்கு வளமான சூழ்நிலை தருவற்கு மழைநீரை சேமிக்கவேண்டும். உலக நலன்வேண்டி பழநியாண்டவர் அருளை பெற எனது மனைவியுடன் தினமும் அதிகாலை 3 மணி முதல் பகல் 11மணி வரையும், மாலை 6மணி முதல் இரவு 8 மணிவரையும் கிரிவீதியை தினமும் 20முதல் 24முறை வலம்வருகிறோம். இதுவரை 815முறை கிரிவலம் முடிந்துள்ளது. வாய்ப்புஇருந்தால் ஒருமுறையாவது எங்களுடன் வலம்வாருங்கள் நலம்பெறுங்கள் என மக்களை அழைக்கிறோம். கல்லுாரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் என பலர் வருகின்றனர். வரும் டிச.,31ல் 1008 கிரிவலத்தை நிறைவு செய்து ஜன.,1 புத்தாண்டில் பழநியாண்டவரை தரிசனம் செய்ய உள்ளோம். எனக்கு 5 சதவீதம் பார்வை மட்டுமே, 96 முறை ரத்ததானம் செய்துள்ளேன், குறும்படங்கள் எடுத்துள்ளேன்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !