பாதுகாப்பான சபரிமலை பயணம்: ஐயப்ப பக்தர்களுக்கு டிப்ஸ்
சபரிமலை: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் பயணத்தை ஆனந்தமாக மாற்ற, கேரள அரசு ஊழியர் ஒருவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் இருந்து சாலை வழியாக பத்தினம் திட்டா, எருமேலி, குமுளி போன்ற பாதைகளில் சென்று சபரிமலை செல்லலாம். தமிழக பக்தர்கள், இந்த வழிகளில் வாகனங்களில் சபரிமலை செல்கின்றனர். நீண்ட மலைப்பகுதி, வளைவான சாலைகள், இருபுறமும் பள்ளங்கள் என அமைந்த சபரிமலை பாதையில், வாகனம் ஓட்டி வரும் டிரைவர்கள் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதை அறிந்த கேரள அரசு மோட்டார் வாகனத்துறையில் பணிபுரியும் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் பிரசாத் என்பவர், துறை மூலமாக தானே முயற்சி எடுத்து ஒரு விழிப்புணர்வு ஆடியோ சிடி வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இந்த இந்த சிடி உருவாக்கப்பட்டுள்ளது. இது பம்பை தொடங்கி சன்னிதானம் வரை ஒலிக்கப்படுகிறது.
இதுபற்றி பிரசாத் கூறியதாவது: நான் புனலுாரில் பணியாற்றுகிறேன். 6 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை வாகன பாதுகாப்பு பணியில் விரும்பி ஈடுபட்டு வருகிறேன். உலகம் முழுவதும் இருந்து சுவாமியை காண வரும் பக்தர்களின் சபரிமலை பயணம் சுகமாக, இனிமையாக, விபத்து இன்றி அமைய வேண்டும் என்பது எனது ஆசை. இதை அரசு பணியாக கருதாமல், ஐயப்ப பக்தர்களுக்கு செய்யும் சேவையாக பார்க்கிறேன். சபரிமலை பாதைகள் பற்றி அறியாமலும், ஒழுங்குமுறை இல்லாமலும் வரும் வாகன ஓட்டிகளால்தான் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதன்பிறகுதான் விழிப்புணர்வு சிடி தயாரிக்கும் எண்ணம் வந்தது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் பக்தர்களிடம் பேசிப்பழகி, அவர்களிடம் அந்த மொழியின் உச்சரிப்பை அறிந்து, விழிப்புணர்வு வாசகங்களை உருவாக்கி சிடியில் நானே பேசி இருக்கிறேன்.
சபரிமலைக்கு வாகனம் ஓட்டி வருபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இதுதான்: பத்தினம்திட்டாவில் தொடங்கி பம்பை வரை ஸேப் ஸோன் (பாதுகாப்பு மண்டலம்) என அறிவிக்கப்பட்டு, ஆங்காங்கே ஹெல்ப் லைன் அலைபேசி எண்கள் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. 45 கி.மீ. மலைப்பாதை பயணத்தின் இடையே, வாகனங்கள் பிரேக் டவுன் ஆகி நின்றுவிட்டால் பக்தர்கள் கவலைப்பட வேண்டாம். ஹெல்ப் லைன் நம்பருக்கு போன் செய்தால், வாகனத்தின் பழுது நீக்க மெக்கானிக்குகள் அனுப்பி வைக்கப்படுவார்கள். பத்தினம்திட்டா தொடங்கி சபரிமலை வரும் சாலைகளின் இருபுறமும், மலைப்பாதைகளில் ஆங்காங்கே 600 அடி பள்ளம் இருக்கும். அதேபோல, மலைச் சாலைகளில் அபாயகரமான வளைவுகள் உண்டு. இந்த பகுதிகளை வாகனங்கள் கடக்கும்போது, டிரைவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இரவில் எதிரே வரும் வாகனங்களுக்கு ஹெட் லைட் டிம் செய்து வழிவிட வேண்டும். வாகனங்களின் மேற்புறத்தில் அமர்ந்து பயணம் செய்யக்கூடாது.
வேன், பஸ்களின் படிகளில் அமர்ந்தும் செல்ல வேண்டாம். ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்களில் சபரிமலை வரவேண்டாம். வாகனங்களின் ஜன்னலுக்கு வெளியே தலை, கைகளை நீட்டியபடி பயணிக்கக் கூடாது. மலைப்பாதைகளில் பயணிக்கும்போது டிரைவர்கள் அதிக வேகத்தில் செல்ல வேண்டாம். ஓவர் டேக் செய்யக்கூடாது. சாலைகளில் தவறான இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். வாகனங்கள் ஓட்டும்போது, டிரைவர்கள் மொபைல் போன் பேசக்கூடாது. மலையில் இருந்து இறங்கும் போது டிரைவர் தகுந்த ஓய்வில் இருக்கிறாரா என்பதை பக்தர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக, பயணம் முழுவதும் சுவாமி ஐயப்பனை மனதில் நிறுத்தி ஆன்மிக உணர்வு குறையாமல் செல்ல வேண்டும்.விழிப்புணர்வு ஆடியோவை சபரிமலையில் 50 பக்தர்கள் கேட்டால், அதில் 10 பேராவது அவர்கள் செல்லும் வாகனத்தின் டிரைவர் மீது கவனமாக இருப்பார்கள் என்பதால், இடைவிடாமல் ஒலிக்கச் செய்கிறோம்.இவ்வாறு கூறினார்.உங்கள் சபரிமலை பயணத்தில் சாலை பாதுகாப்பு குறித்து சந்தேகம் என்றால் பிரசாத்தை 094470 94687 ல் அழைக்கலாம்.