ஆரியங்காவு தர்மசாஸ்தா புஷ்கலாதேவி திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்
ஆரியங்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாணம் நேற்றிரவு கோலாகலமாக நடந்தது.நேற்று முன்தினம் இரவு கோயிலின் ராஜகொட்டாரத்தில் பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்தம் இரவு 9:30 மணிக்கு நடந்தது. ஆரியங்காவு கோயிலின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி - அம்பாளுக்கு சவுராஷ்டிரா மக்கள் சார்பில் சோமஞ்ஜோடி வழங்கப்பட்டது. இரவு 9:00 மணிக்கு திருக்கல்யாண விருந்து நடந்தது. இரண்டு சப்பரங்களும் ஒன்றாக கோயிலை வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தை அடைந்தது.
சவுராஷ்டிரா சாஸ்திர சம்பிரதாயப்படி நேற்றிரவு 10:40 மணிக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு மரியாதை செய்விக்கப்பட்டது. திருக்கல்யாணத்தை ஸ்ரீதர் பட்டர் நடத்தி வைத்தார். திருக்கல்யாண உற்சவதாரராக கே.ஆர்.ஹரிஹரன் இருந்தார். ஏற்பாடுகளை சங்கத் தலைவர் கே.ஆர்.ராகவன், பொதுச் செயலாளர் எஸ்.ஜெ.ராஜன், கோயில் அதிகாரி கணேசன் போர்த்தி செய்திருந்தனர். இன்று மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு கலாபிஷேகம், களபாபிஷேகம், மதியம் 2:00 மணிக்கு சர்வராஜ அலங்காரம், தீபாராதனையுடன் மண்டலபூஜை நிறைவடைகிறது.