ஆஸி.,யில் இருந்து வந்த பிரத்யங்கரா சிலை
சென்னை: கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு கடத்தி செல்லப்பட்ட, பிரத்யங்கரா சிலை உள்ளிட்ட, மூன்று சிலைகள் மத்திய அரசின் முயற்சியால், டில்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சர்வதேச சிலை கடத்தல் ஆசாமி சுபாஷ் கபூர், சமீபத்தில் கைது செய்யப்பட்ட சிலை கடத்தல்காரன் நான்சி வைனர் ஆகியோரிடம் இருந்து, கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலை சேர்ந்த பிரத்யங்கரா சிலை, புத்தர் சிலை, புத்தரை வழிபடுபவர்கள் சிலை ஆகியவை, ஆஸ்திரேலியாவின் கான்பரா நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்தன. இதில், பிரத்யங்கரா சிலை, 800 ஆண்டுகள் பழமையானது.
மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்: தமிழகத்தின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் மத்திய அரசு இந்த சிலைகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர கடும் முயற்சி எடுத்தனர்.அதன்பயனாக, மூன்று சிலைகளும், டிச.,15ம் தேதி டில்லி கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், பிரத்யங்கரா சிலையை தமிழகத்திற்கு தர வேண்டும் என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர். எனினும், இன்னும் ஒரு மாதத்திற்கு மூன்று சிலைகளும் டில்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என இந்திய தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.