ஐயப்ப சுவாமி திருவீதியுலா
திருப்பூர்: ஐம்பெரும் விழாவையொட்டி, ஐயப்ப சுவாமி திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், மகரஜோதி பக்தர்கள் குழு சார்பில், 21ம் ஆண்டு ஐம்பெரும் விழா, கணபதி ஹோமத்துடன் நேற்று துவங்கியது. ஐயப்பசுவாமி ஊர்வலம், மேளதாளம் மற்றும் வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. நேற்று கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமியின் ரத ஊர்வலம் துவங்கியது. மங்கலம் ரோடு பழக்குடோன் வழியாக, பாரப்பாளையம் பிரிவை சென்றடைந்தது. ஊர்வலத்தில், சிங்காரி மேளம், செண்டை மேளம் இடம் பெற்றது. பாரப்பாளையம் பிரிவு அருகே, புதிய பச்சை பந்தல் அமைத்து, அலங்கரிக்கப்பட்ட மேடையின் மீது ஐயப்பன், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளின் உற்சவமூர்த்திகளை பிரதிஷ்டை செய்து, தொடர்ந்து வழிபாடு நடக்க உள்ளது. இன்று மாலை, 108 திருவிளக்குபூஜையும், ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் தீபாராதனையும் நடைபெற உள்ளது.
நாளை மாலை, 5:30 மணிக்கு, சங்கத்தமிழ் அமைப்பு சார்பில், பக்தி இலக்கியங்களில் கருத்துக்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கவா? படித்து மகிழவா? என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடக்கிறது. இரவு, 7:30 மணிக்கு, ஐயப்பன் மகா கன்னிசாமி பூஜையும், கலசபூஜையும், கூட்டு பஜனையுடன் நடைபெற உள்ளது. வரும், 28ம் தேதி காலை, 9:00 மணிக்கு, சங்க கொடியேற்றும் நிகழ்ச்சியும், காலை, 10:00 மணிக்கு அன்னதான பூஜையும் நடக்கிறது. காலை, 11:00 மணி முதல் அன்னதானம் நடைபெறும். பள்ளி குழந்தைகளுக்கு நல உதவி வழங்கப்பட உள்ளது.