உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேம்பட்டி மார்கழி உத்சவ் துவக்கம்

வேம்பட்டி மார்கழி உத்சவ் துவக்கம்

சென்னை: சென்னையில், வேம்பட்டி மார்கழி உத்சவ் நிகழ்ச்சி, நேற்று துவங்கியது. சென்னை, குச்சுப்புடி ஆர்ட் அகாடமி மற்றும் டில்லி சங்கீத் நாடக் அகாடமி சார்பில், வேம்பட்டி மார்கழி உத்சவ் என்ற தலைப்பில், இசை, நாட்டிய நிகழ்ச்சி, நேற்று துவங்கியது; இது, வரும், 31ம் தேதி வரை நடைபெறுகிறது. குச்சுப்புடி ஆர்ட் அகாடமியின் நிறுவனரும், நடன ஆசிரியருமான, வேம்பட்டி சின்ன சத்யத்திடம் நடனம் பயின்றவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரின் நினைவை போற்றும் வகையில், ஜெயப்ரியா விக்ரமன், வேம்பட்டி லட்சுமி காமேஸ்வரி, சஹானா ராவ் ஆகியோர், குச்சுப்புடி நடனம் ஆடினர். நிகழ்ச்சியை, மயிலாப்பூர், எம்.எல்.ஏ., - ஆர்.நடராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சங்கீத் நாடக் அகாடமி விருது பெற்ற, லீலா வெங்கடராமன், சுனில் கோத்தாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !