ஆதிபராசக்தி கோவிலுக்கு பாதயாத்திரை வந்த பெண் பக்தர்கள்
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஆதிபராசக்தி கோவிலுக்கு, 2,000க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள், இருமுடி சுமந்து, பாதயாத்திரை வந்து வழிபட்டனர். பனமரத்துப்பட்டி பிரிவு சாலை, ஈசன் நகரில் உள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு, திருமண பாக்கியம், குழந்தை வரம் வேண்டி, பெண் பக்தர்கள் விரதம் இருந்தும், பால்குடம் எடுத்து வந்தும், சக்தி அம்மனை வழிபடுகின்றனர். கடந்த, 16ல், வேண்டுதல் நிறைவேற வேண்டி, மாலை அணிந்து, பெண் பக்தர்கள் பலர் விரதத்தை துவக்கினர். நேற்று காலை, 9:00 மணிக்கு, சேலம், கல்லாங்குத்து அரசமரபிள்ளையார் கோவிலில் இருந்து, மாலை அணிந்த பக்தர்கள், இருமுடி சுமந்து, பாதயாத்திரையாக, பனமரத்துப்பட்டி பிரிவு சாலை, ஆதிபராசக்தி கோவிலுக்கு நடந்து வந்தனர். பக்தர்களுக்கு, கோவி லில் பாத பூஜை செய்யப்பட்டது. அவர்கள், இருமுடியை சக்தி சன்னதியில் சமர்ப்பித்து, வேண்டுதலை நிறைவேற்றக்கோரி, மனமுருகி வழிபட்டு, விரதத்தை நிறைவு செய்தனர். இதில், பல்வேறு பகுதியில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.