வாசலை மறித்து கார் பார்க்கிங்: மனவேதனையில் ஆண்டாள் கோயில் மாடவீதி மக்கள்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு தனியாக பார்க்கிங் இடவசதி செய்து தராததால், கோயிலை சுற்றியுள்ள மாடவீதிகள், ரதவீதிகளில் உள்ள வீட்டு வாசல்களை மறித்து வாகனங்கள் நிறுத்தபடுவதால், அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, கார் பார்க்கிங் வசதியை செய்து தர கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
108 வைணவதலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்க, வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களின் கார்,வேன், பஸ்களை நிறுத்த தனியாக பார்க்கிங் இடவசதியில்லாததால் கோயிலை சுற்றியுள்ள நான்கு மாடவீதிகள் மற்றும் ரதவீதிகளில் உள்ள வீடுகளின் வாசலை மறித்து வாகனங்கள் நிறுத்தபடுகிறது.இதனால் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து எளிதாக வந்து செல்லவோ, தங்களது சைக்கிள் மற்றும் டுவீலர்களை நிறுத்தவோ, அவசரத்திற்கு வெளியில் எடுத்துசெல்லவோ முடியவில்லை. முதியவர்கள், மருத்துவசிகிச்சை பெறுவோர், மாற்றுத்திறனாளிகள் படும் வேதனைமிக அதிகம். வாகனங்களில் வருவோர் வீட்டு வாசல்களில் எச்சில் துப்புவது, குப்பைகளை கொட்டுவது, சிகரெட் புகைப்பது, சிறு குழந்தைகள் மலம் கழிப்பது என பல்வேறு தொல்லைகளை ஏற்படுத்துகின்றனர்.
கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமாக திருப்பாற்கடல் மேற்புறமுள்ள காலியிடத்தில் வாகனபார்க்கிங் அமைக்க பரிசீலித்த நிலையில், ஏனோ செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, கோயில் மற்றும் நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து, காலதாமதமின்றி கார் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி, கோயிலைசுற்றியுள்ள வீடுகளின் மக்கள் நலனை காக்கவேண்டும்.
வருவாயில் ஆர்வம்;வசதிகள் குறைவு: முனியப்பன்; தேசியநெடுஞ்சாலையிலும், நகராட்சிக்குரிய ரோட்டிலும் நிறுத்தபடும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் கோயில் நிர்வாகம், அதற்கு தகுந்தளவிற்கு பார்க்கிங் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. இதனால் கீழரதவீதியில் அதிகளவு வாகனங்கள் நிறுத்தபடுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, உடல் காயங்களும், உயிரிழப்புகளும் நடக்கிறது. எனவே, திருப்பாற்கடல் பகுதியில் பார்க்கிங் வசதி செய்துதர ஆண்டாள்கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
விபத்து அபாயம்: காமராஜ்; ஆண்டாள் கோயில் கீழரதவீதி வழியாகத்தான் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் அதிகளவு வாகனபோக்குவரத்துள்ளது. இதில் பல தடவை விபத்துகள் ஏற்பட்டு, பலர் காயமும், சில உயிர்ப்பலிகளும் நடந்துள்ளது. இதில் வெளியூர் வாகனங்களும் நிறுத்தபடுவதால் விபத்துகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, திருப்பாற்கடல் பகுதியில் கார் பார்க்கில் வசதியை ஏற்படுத்தவேண்டும்.
வசிக்கமுடியவில்லை: அய்யாவுபாண்டியன்; ரதவீதிகளில் வாகனங்கள் நிறுத்தபடுவதால், அதில் வரும் பக்தர்கள் அவசரத்திற்கு தங்கள் இயற்கை உபாதைகளை, வீட்டு வாசல்களில் கழிக்கின்றனர், குழந்தைகள் மலம் கழிக்கின்றனர். சிலர் வாந்தி எடுக்கின்றனர். இதனால் ரதவீதிகளிலுள்ள வீடுகளில் பொதுமக்கள் வசிக்கமுடியவில்லை. பால்கோவா வாங்க காரை நிறுத்தினாலே பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் கொடுமை நடக்கிறது.
கோலம் போடமுடியவில்லை: மாரியம்மாள்; மாடவீதிகளில் வீட்டு வாசல்களை மறித்து வாகனங்களை நிறுத்திகொள்கின்றனர். வெளியில் வரமுடியவில்லை. சுகாதாரகேடுகளை ஏற்படுத்துகின்றனர், தாங்கள் கொண்டு வந்த பொருட்களின் கழிவுகளை வாசல்களில் போட்டு விட்டு செல்கின்றனர். கோலம் கூட போடமுடிவதில்லை. வாகனங்களை நிறுத்தாதீர்கள் எனக்கூறினால் இது பார்க்கிங் ஏரியா என்கின்றனர். இதனால் வீட்டை பூட்டிக்கொண்டு இருக்கவேண்டியுள்ளது.