ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா : நாமக்கல்லில் கோலாகலம்
நாமக்கல்: ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 54 ஆயிரம் வடைகள் மாலை சாற்றப்பட்டது. நாமக்கல் நகரின் மையத்தில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, அனுமன் ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, 54 ஆயிரம் வடைகள் மாலை சாற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதியம், 12:00 மணிக்கு, ஆஞ்சநேயர் சுவாமிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம், 2:00 மணிக்கு, தங்க கவசம் சாற்றப்பட்டது. சுவாமிக்கு சாற்றப்பட்ட, வடைகள், பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
1,00,008 வடை மாலை : திருச்சி, ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி உற்சவத்தையொட்டி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. காலை, 7:00 மணிக்கு உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நன்மைக்காகவும் ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து எட்டு வடை, 10 ஆயிரத்து எட்டு ஜாங்கிரிகளால் அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. இரவு சுவாமி திரு வீதி உலா நடந்தது.