கரூர் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு
தான்தோன்றிமலை: கரூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும், நேற்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிக்கு துளசி மாலை அணிவித்தும், வடைமாலை சாற்றியும் வழிபட்டனர். கரூர், ஈஸ்வரன் கோவில் அருகேயுள்ள, ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு காலை, 7:00 மணிக்கு பசுபதி ஆஞ்சநேயர் சுவாமிக்கு மஹா யாகம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேருக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம், இளநீர், திரவியப்பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த வடைமாலைகள் சாற்றப்பட்டது. ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. நேற்றிரவு, 7:00 மணியளவில் பசுபதி ஆஞ்சநேயர் சுவாமி வீதியுலா நடந்தது. வெண்ணெய்மலை ஆத்மநேச ஆஞ்சநேயர் கோவில், வெள்ளியணை தென்பாகம் கிராமம், பச்சப்பட்டியில் உள்ள பால ஆஞ்சநேயர் கோவில், அபயப்பிரதான பெருமாள் கோவில், தான்தோன்றி மலையில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் உட்பட பல்வேறு சன்னதியில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் உள்ள, ஆஞ்சநேயருக்கு பல்வேறு மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் மற்றும் வடைமாலை சாற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* கிருஷ்ணராயபுரம் தாலுகா, லாலாப்பேட்டை கொடிக்கால் செல்லும் சாலையில், பிரசித்தி பெற்ற ஆஞ்நேயர் கோவில் உள்ளது. அனுமன்ஜெயந்தி விழா முன்னிட்டு, ஆஞ்சநேயர் சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்து, மலர்கள் மற்றும், 508 வடைமாலை சாற்றப்பட்டு பூஜை செய்யப்பட்டது. லாலாப்பேட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.