அனுமன் ஜெயந்தி விழா: தர்மபுரி கோவில்களில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி: அனுமன் ஜெயந்தியையொட்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள, பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி எஸ்.வி., ரோடு ஆஞ்சநேய சுவாமி கோவிலில், அதிகாலை, 6.00 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. காலை, 8:00 மணிக்கு மேல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். வே.முத்தம்படட்டி வீரஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசம் செய்தனர். இதேபோல், தர்மபுரி ஹரிஹரநாத சுவாமி கோவில்தெரு தாசஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கனவாய் ஆஞ்சநேயர் கோவில், சவுளூர் ஆஞ்சநேயர் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்ச நேயர் கோவில்களில், ஹனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
* கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, மஹா சுதர்சன ஹோமம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை தங்கத் தேர் உற்சவம் நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதா ராம, வீர ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திர சுவாமிகளின் ம்ருத்திகா ப்ருந்தாவனத்தில் நடந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நெடுமருதி கிராமம் வசந்தப்பள்ளி ஏரி ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த விழாவில், சீதா ராம கல்யாணம், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பர்கூர் அடுத்த சின்னகாரகுப்பம் ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று விஸ்வரூப தரிசனம் நடந்தது.