உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரப்பன் வழிபட்ட முத்தத்திராயன் கோவிலில் மார்கழி அமாவாசையொட்டி சிறப்பு வழிபாடு

வீரப்பன் வழிபட்ட முத்தத்திராயன் கோவிலில் மார்கழி அமாவாசையொட்டி சிறப்பு வழிபாடு

பென்னாகரம்: பென்னாகரம் அருகே உள்ள முத்தத்திராயன் சுவாமிக்கு, காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீர் கொண்டு வந்து, நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். பென்னாகரம் தாலுகாவுக்கு உட்பட்ட நெருப்பூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற முத்தத்திராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சந்தனமர கடத்தல் வீரப்பன் உயிருடன் இருந்த போது, அடிக்கடி வந்து வழிபட்டு சென்றதால், இந்த கோவிலை வீரப்பன் கோவில் என்றும் பொதுமக்கள் அழைக்கின்றனர். நேற்று மார்கழி மாத அமாவாசையையொட்டி, நெருப்பூர், ஒட்டனூர், காட்டூர், நாகமரை, பன்னவாடியன்காடு, காமராஜ்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து, மேட்டூர் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய, சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்க, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகளவில் பக்தர்கள் வந்ததால், வாகனங்களை நிறுத்த முறையான வசதி செய்து தரப்படவில்லை, முறையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது பக்தர்கள் குற்றம் சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !