உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பக்தர்களிடம் போலி கைடுகள் வசூல்: மலைக்கோயில் செல்ல ரூ.2000 கட்டணம்

பழநி பக்தர்களிடம் போலி கைடுகள் வசூல்: மலைக்கோயில் செல்ல ரூ.2000 கட்டணம்

பழநி: பழநி மலைக்கோயிலில் விரைந்த தரிசனம் மற்றும் கோயில்களை சுற்றிக் காட்டுவதற்கு எனக்கூறி, போலி ’கைடுகள்’ (இடைத்தரகர்கள்) சிலர் ரூ.2000 வரை பக்தர்களிடம் வசூலிக்கின்றனர். புகழ்பெற்ற ஆன்மிக தலமான பழநி மலைக்கோயிலுக்கு சபரிமலை ஐயப்ப பக்தர்கள், தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அரையாண்டுதேர்வு விடுமுறை காரணமாக வெளியூர் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர்.

போலி கைடுகள்: இதனால் சாதாரண நாட்களில் 2 மணிநேரம், விடுமுறை நாட்களில் 4 மணிநேரம் வரை பக்தர்கள் காத்திருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணி சுவாமியை தரிசிக்கின்றனர். அவ்வாறு காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக தரிசனத்துக்கு ஏற்பாடு செய்கிறோம்” எனக்கூறி சுற்றுலா பயணிகள், பக்தர்களை, பஸ் ஸ்டாண்ட், அடிவாரம் பகுதிகளிலேயே வழி மறைத்து, ’கைடுகள்’ என அறிமுகப்படுத்திக்கொள்ளும் கும்பல் வசூல்வேட்டை நடத்துகிறது.

சிறப்பு அறைகள், ஸ்பெஷல் தரிசனம், பூஜை செய்து தருவது மற்றும் கோயில் வரலாறு, அணைகளை சுற்றிப்பார்ப்பது எனக் கூறி. ரூ.1500 முதல் ரூ.2000 வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். பழநி பாதவிநாயகர் கோயில், வின்ச், ரோப்கார் ஸ்டேஷன் அருகே ஆரம்பிக்கும், இவர்களின் ’கவனிப்பு’ மலைக்கோயில் வரை தொடர்கிறது. இவர்களிடம் சிக்கும் பக்தர்கள் பெரும்பாலும் அவஸ்தைப்படுகின்றனர். இவ்விஷயத்தில் போலீசார் போலி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பழநியில் ’போலி கைடுகளை’ கட்டுப்படுத்த முடியவில்லை. குடும்பத்துடன் வரும் பக்தர்கள், இவர்களிடம் பணத்தை இழக்கின்றனர்.

கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பழநிகோயிலுக்கு என கைடுகள் கிடையாது. ’போலி’களிடம் ஏமாற வேண்டாம் என ஒலிபெருக்கியில் எச்சரிக்கிறோம். அறிவிப்பு பலகையும் உள்ளது. இதனால் மொழி தெரியாத வெளியூர் பக்தர்கள் அவர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். புகார் அளித்தால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !