சிவகங்கையில் புத்தாண்டு கோலாகலம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை புனித அலங்கார அன்னை சர்ச்சில் நேற்றுமுன்தினம் இரவு மறைமாவட்ட பிஷப் சூசைமாணிக்கம் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது. சிவகங்கை விஸ்வநாதர் கோயில், காளையார்கோவில் காளீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பாதிரியார் மரியடெல்லஸ் பங்கேற்றார். இடைக்காட்டூர் திருஇருதய சர்ச்சில் பாதிரியார் ரெமிஜியஸ் தலைமையில் நடந்தது.
திருப்புத்துார்: திருப்புத்துார் அமல அன்னை சர்ச்சில் சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் மைக்கேல்ராஜ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது. பாதிரியார் ஜெகனாதன் பங்கேற்றார். தமிழ் சுவிசேஷ லுத்தரன் ஆரோக்கிய நாதர் சர்ச்சில் மாலை 6:00 மணிக்கு ஆண்டின் இறுதி பாவமன்னிப்பு ஆராதனை, இரவு 11:30 மணிக்கு கடவுள் அளித்த நன்மைகளுக்கான நன்றி ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடந்தது. சபைகுரு அலெக்ஸாண்டர் தலைமை வகித்தார்.
தேவகோட்டை: தேவகோட்டை சகாய அன்னை சர்ச்சில் பாதிரியர் பாஸ்டின் தலைமையிலும், உலகமீட்பர் சர்ச்சில் பாதிரியார் சந்தியாகு தலைமையிலும், சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் சர்ச்சில் ஜெம்சஜ் ஜெபசிங் தலைமையிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தன. மேலும் புத்தாண்டை முன்னிட்டு சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், சிவன் கோயில், ரங்கநாதர் பெருமாள் கோயில், சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
காளையார்கோவில்: புனித அருளானந்தர் சர்ச்சில் பாதிரியார் அற்புத அரசு தலைமையிலும், சூசையப்பர் பட்டணம் புனித சூசையப்பர் சர்ச்சில் பாதிரியார் டேவிட் குழந்தைநாதன் தலைமையிலும், ஆண்டிச்சி ஊரணி துாய அடைக்கலமாத சர்ச்சில் பாதிரியார் பாஸ்கல் டேவிட் தலைமையிலும், பள்ளித்தம்மத்தில் புனித மூவரசர் சர்ச்சில் பாதிரியார் அந்தோணிஜோசப் தலைமையிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தன.