உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி கோவில்களில் சிறப்பு பூஜை

புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி கோவில்களில் சிறப்பு பூஜை

புதுச்சேரி: புத்தாண்டையொட்டி புதுச்சேரி கோவில்களில் சிறப்பு பூஜைகள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 4:௦௦ மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பின், மகா தீபாராதனை நடந்தது. உற்சவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலில், அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புதுச்சேரி மட்டுமின்றி வெளி மாநில சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்திருந்தனர்.கோவிலில் இருந்து செஞ்சி சாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர்.

சாய்பாபா கோவில்: பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபா கோவிலில் காலை 8:௦௦ மணிக்கு சிறப்பு பூஜைகள் கொடியேற்றத்துடன் துவங்கின. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12:௦௦ மணிக்கு ஆரத்தி எடுத்து, பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

அலைமோதிய பக்தர்கள்:
திண்டிவனம் சாலை யில் உள்ள பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில், புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள், காளஸ்தீஸ்வரர் கோவில், காமாட்சியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோவில், முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவில், சின்னசுப்ராயபிள்ளை விதியில் உள்ள அங்காளம்மன் கோவில், கவுசிக பாலசுப்ரமணியர் கோவில், பாரதி பூங்காவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில், பிரதியங்கிரா கோவிலில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்ததால் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.அதேபோல் புதுச்சேரியில் உள்ள ஜென்மராக்கினி, இருதய ஆண்டவர் பசிலிக்கா உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள், சிறப்பு திருப்பலிகள் நடந்தன.

சுற்றுலா தலங்களில் கூட்டம்
: புத்தாண்டையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, ஆரோவில் பீச், சுண்ணாம்பாறு படகு குழாம், கோட்டக்குப்பம் ஆரோ பீச் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. புதுச்சேரியின் அனைத்து இடங்களிலும் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !