உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

தேனி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

தேனி: ஆங்கில புத்தாண்டையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.  தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தேனி பங்களாமேட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பெத்தாட்சி விநாயகர் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் போன்ற முக்கிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில்களில் அதிகாலை முதல் மாலை வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தேனி பங்களா மேட்டில் உள்ள ஆர்.சி., சர்ச்சில் பாதிரியர் ஜான்மார்டீன் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கம்பம்: கம்பம் பகுதியில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பிரார்த்தனைகளில் பங்கேற்றனர். கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது. ஒரே வளாகத்தில் சிவனும், பெருமாளும் எழுந்தருளியுள்ள இங்கு அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதிகளவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டினர்.பிரசித்திபெற்ற வேலப்பர் கோயில், கவுமாரியம்மன் கோயில், சாமாண்டியம்மன் கோயில், நந்தகோபாலன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ராயப்பன்பட்டி : ராயப்பன்பட்டி பனிமய மாதா தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இதில் பங்கேற்று ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

கம்பம்: தேவாலயங்களிலும் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு பிரார்த்தனைகள் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் பட்டாசு வெடித்து, பெண்கள் வீடுகள் முன் கோலமிட்டும் வரவேற்றனர்.உத்தமபாளையம் போஸ்ட் ஆபீஸ் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்ற பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.

சுருளியில் மக்கள் வெள்ளம் : அதிகாலை முதல் சுருளி அருவியில் குளிப்பதற்கு மக்கள் வெள்ளமென திரண்டனர். அருவியில் குளித்து, இங்குள்ள சுருளி வேலப்பர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டனர். உலக நன்மை வேண்டி ஆதிஅண்ணாமலையார் கோயிலில் சிவனடியார் முருகன் சுவாமி சிறப்பு யாகம் நடத்தினார்.

உத்தமபாளையம்: காளாத்தீஸ்வரர் கோயில், நரசிங்க பெருமாள் கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பொதுமக்கள் அதிக அளவில் சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். கோயில் வளாகத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றது.

போடி: சீனிவாச பெருமாள் கோயிலில் மலர் அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூமிதேவியுடன் சீனிவாசப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் பாலகிருஷ்ணன், சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சியர் செய்திருந்தார்.

*போடி பரமசிவன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. கீழச்சொக்கநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகன், வள்ளி, தெய்வாணைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. போடி புதுார் சங்கடகர விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அக்ரஹாரம் பாலவிநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அலங்காரத்தினை கமலக்கண்ணன் பட்டாச்சியர் செய்திருந்தார்.

* போடி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் உலக அமைதி வேண்டி மாதாவிற்கு சிறப்பு வழிபாடுகள், கலை நிகழ்ச்சிகள் கூட்டு வழிபாடுகள் நடந்தது. தென்னிந்திய திருச்சபை சர்ச்சில் குடும்ப நன்மை, உலக அமைதிக்காக சிலுவை வழிபாடு பிரார்த்தனைகள் நடைபெற்றன. நள்ளிரவு 12 மணிக்கு மேல் புத்தாண்டை வரவேற்கும் வகையில் மக்கள் பட்டாசு வெடித்தும், பெண்கள் வீடுகளுக்கு முன்பாக வண்ண கோலமிட்டு புத்தாண்டை வரவேற்றனர்.

* புத்தாண்டு சிறப்பு கொண்டாட்டம் போடி குரங்கணி மெயின்ரோட்டில் உள்ள ‘கிரீன் ராயல் ரிசார்ட்ஸ்’ ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இரவு 7மணி முதல் புத்தாண்டு உதயமாகும் வரை பெண்கள், குழந்தைகள், பெரியவர்களுக்கான வேடிக்கை விளையாட்டு, கேம் ஷோ நடந்தது. புத்தாண்டு பிறந்ததும் பட்டாசு வெடித்து வரவேற்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் 15 வகையான சைவ, அசைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உணவு இலவசமாகவும், 6 முதல் 12 வயது வரை 40 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டன. ஏராளமானோர் பங்கேற்றனர்.

பெரியகுளம்: பெரியகுளம் பகுதி கோயில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை,தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. பாலசுப்பிரமணியர் கோயில், வரதராஜப்பெருமாள் கோயில் கோவிந்தா, கோவிந்தா என நாமம் ஒலிக்க மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாரியம்மன் கோயில், கம்பம் ரோடு காளியம்மன் கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில், காளாஸ்திரிநாதர் கோயில்களில் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஷீரடி சாய்பாபா கோயிலில் பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* பெரியகுளம் ஆர்.சி, சர்ச், சி.எஸ்.ஐ., சர்ச், கோட்டைமேடு சர்ச் உட்பட அனைத்து சர்ச்சுகளிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. நண்பர்கள்,உறவினர்கள் ஒருவருக்கொருவர் ‘கேக்’ மற்றும் இனிப்பு வழங்கி அன்பை பரிமாறிக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !