மதுரை கோயில்களில் பக்தர்கள் புத்தாண்டு தரிசனம்
அழகர்கோவில்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசித்தனர். புத்தாண்டை முன்னிட்டு அழகர்கோவில் மலை மீது உள்ள ராக்காயி அம்மன் தீர்த்தத்தில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக அதிகாலையே மலைப்பாதை திறக்கப்பட்டது. கோயில் சார்பில் இயங்கும் பஸ்களும் இயக்கப்பட்டன. கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் நின்று நீராடிய பக்தர்கள் தீர்த்த தொட்டியில் இருக்கும் ராக்காயி அம்மனை தரிசித்தனர். புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. சோலைமலை முருகன் கோயிலில் சஷ்டி மண்டபத்தில் காலையில் யாகசாலை பூஜை நடந்தது. மூலவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானைக்கு 18 வகையான அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. தங்க அங்கி, வைர வேலுடன் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சஷ்டி மண்டபத்தில் இருக்கும் உற்சவர் மற்றும் ஆறுமுக பெருமானுக்கு பாலாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலையே நடை திறக்கப்பட்டது. மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதிகாலையே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசித்தனர்.