உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இஸ்கான் ஜெகன்நாதருக்கு திருமஞ்சன சேவை

இஸ்கான் ஜெகன்நாதருக்கு திருமஞ்சன சேவை

கோவை: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் இஸ்கான் சார்பில், கோவையில் நடைபெற உள்ள, தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பகவான் ஜெகன்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ராதேவியாருக்கு நேற்று திருமஞ்சன சேவை கொடிசியா அருகேயுள்ள ஜெகன்நாதர் ஆலயத்தில் நடைபெற்றது. காலை, 6:00 மணிக்கு, ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. மரத்தினாலான ஸ்ரீஜெகன்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ராதேவியார் விக்கிரகங்களுக்கு ஆண்டுதோறும் புத்தாண்டு நன்னாளில், ஒரே ஒருமுறையே இத்திருமஞ்சன அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று, பல நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட, புனித நீரைக்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட பின்பு, பக்தி வினோத சுவாமியின் சிறப்புச்சொற்பொழிவு நடைபெற்றது. பக்தர்கள் ஆயிரத்தெட்டு உணவுப்பதார்த்தங்கள் பகவானுக்கு படைத்தனர். கோவை ராஜவீதியிலுள்ள தேர்நிலைத்திடலில், வரும், 7ம் தேதி மாலை, நடைபெறும் தேர்த்திருவிழாவில், அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா என, 25 நாடுகளைச் சேர்ந்த ஹரே கிருஷ்ணா பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

ஜன., 8ம் தேதி, பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில், நவஇந்தியாவிலுள்ள அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவில், சலிவன்வீதியிலுள்ள வேணுகோபால சுவாமி கோவில், பெரியகடைவீதியிலுள்ள லட்சுமி நாராயண வேணுகோபாலசுவாமி கோவில் மற்றும் ராம்நகர் ராமர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் இஸ்கான் சார்பில் சிறப்பு பஜனைகள் நடைபெறவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !