உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் ஒரு லட்சம் பக்தர்கள் புத்தாண்டு தரிசனம்!

திருத்தணி முருகன் கோவிலில் ஒரு லட்சம் பக்தர்கள் புத்தாண்டு தரிசனம்!

திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொது வழியில், ஆறு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

வசந்த மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7:30 மணிக்கு, தங்கத் தேரில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, ஆங்கில புத்தாண்டு மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கத்திற்கு மாறாக மலைக்கோவிலில், அதிகாலை முதல், இரவு, 9:00 மணி வரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொது வழியில், ஆறு மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். மேலும், பக்தர்கள் விரைவு தரிசனம் செய்வதற்கு வசதியாக, 50 மற்றும், 150 ரூபாய் சிறப்பு கட்டண டிக்கெட்டுகள் மலைக்கோவிலில் விற்பனை செய்யப்பட்டன. மாவட்ட எஸ்.பி., சாம்சன் தலைமையில், 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். படித்திருவிழா மற்றும் புத்தாண்டு சிறப்பு தரிசனத்தையொட்டி, மலைக்கோவில் முழுவதும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

திருத்தணி, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவில், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவில், அரக்கோணம் சாலையில் உள்ள முக்கண் விநாயகர் கோவில். மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல், ஷீரடி சாய் பாபா கோவில், கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், நாபளூர் காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், கே.ஜி.கண்டிகை கைலாச பிரம்ம கோவில், தாடூர் கடலீஸ்வரர் கோவில். திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள, சதாசிவலிங்கேஸ்வரர் கோவில் உட்பட ஒன்றியத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு, நள்ளிரவு, 12:01க்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, நேற்று, புத்தாண்டு சிறப்பு தரிசனம் மற்றும் வழிபாடு நடந்தது. இதில், காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, பக்தர்கள் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று மூலவரை வழிபட்டனர். இது தவிர, திருத்தணி தாலுகாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.

திருவள்ளூர்: ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பல்வேறு கொண்டாட்டங்கள் நடந்தன. பெரியகுப்பம் மூங்காத்தம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முன் தினம் இரவு அம்மனுக்கு அபிஷேகமும், நள்ளிரவில் உற்சவர் அம்பாள் கோவில் பிரதட்சணம் மற்றும் ஊஞ்சல் சேவை நடந்தது. வீரரராகவ பெருமாள் கோவிலில், தனுர் மாத பூஜை, புத்தாண்டு பிறப்பு ஆகியவற்றை முன்னிட்டு, நேற்று காலை, 4:30 மணிக்கே துவங்கியது. கனகவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலையில் தாயார் உள் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று காலை, 5:30 மணிக்கு புஷ்ப அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூங்கா நகர், சிவ-விஷ்ணு கோவிலில், ஜலநாராயண சன்னிதியில் புத்தாண்டை முன்னிட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பத்மாவதி தாயாருக்கு, காலை, 5:30 மணிக்கு, அபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை நடந்தது.

விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், காக்களூர், வீரஆஞ்சநேயர் கோவில், தேரடி அருகில் அமைந்துள்ள வேம்புலி அம்மன் கோவில், திரபுர சுந்தரி அம்மன் சமேத தீர்த்தீஸ்வரர் கோவில், என்.ஜி.ஓ., காலனி விநாயகர் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி: நேற்று, கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கும்மிடிப்பூண்டி, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், குரு தட்சிணாமூர்த்தி கோவில், ஞானவேல் முருகன் கோவில், எஸ்.பி.முனுசாமி நகர் சித்தி விநாயகர் கோவில், புதுகும்மிடிப்பூண்டி எல்லையம்மன் கோவில், பாலீஸ்வரர், சந்திரசேகரர் சுவாமி. கவரைப்பேட்டை அருகே, அரியதுறை வரமூர்த்தீஸ்வரர் கோவில், பஞ்செட்டி அகத்தீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, நேற்று, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நாள் முழுவதும் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று இறைவனை வழிபட்டனர்.

பொன்னேரி: பொன்னேரி, ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில், திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவில், பெரும்பேடு முத்துகுமாரசுவாமி, ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணிய சுவாமி, திருப்பாலைவனம் பாலீஸ்வரர். மீஞ்சூர் வரதாஜ பெருமாள், மேலுார் திருவுடையம்மன் கோவில், தேவதானம் ரங்கநாதர் கோவில், உள்ளிட்டவற்றில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், வழிபாடுகளும் நடந்தன. பழவேற்காடு மகிமை மாதா திருச்சபை, பொன்னேரி திருவேங்கிடபுரம் செயின்ட் ஜேம்ஸ் சர்ச் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.

ஊத்துக்கோட்டை: ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி, ஊத்துக் கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலண்டேஸ்வரர் கோவில், கன்னியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், செல்லியம்மன் கோவில், பஜார் செல்வ கணபதி கோவில், புற்றுக்கோவில், சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், தொம்பரம்பேடு காலபைரவர் கோவில், நாகவல்லியமமன் கோவில், தாராட்சி பரதீஸ்வரர் கோவில். பெரியபாளையம் பவானி யம்மன் கோவில், வட தில்லை பாபஹரேஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் கோவில், பென்னலுார் பேட்டை ஆஞ்ச நேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு தினத்தை ஒட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. காலை முதல், கோவில்களில் பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமியை தரிசனம் செய்தனர். கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு பிராத்தனைகள் நடந்தன. - நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !