ஆங்கில புத்தாண்டு கோலாகலம்: மலைக்கோட்டையில் குவிந்த மக்கள்
நாமக்கல்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் நகருக்கு வந்த பொதுமக்கள், கூட்டம் கூட்டமாக, மலைக்கோட்டைக்கு சென்று, நகரின் அழகை கண்டு ரசித்தனர். நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள மலைக்கோட்டை, மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. பாறையின் மீது அமைந்துள்ள இந்த கோட்டை, ராமச்சந்திர நாயக்கர் கட்டியதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், திப்புசுல்தான் இந்த கோட்டையில் இருந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார். சிறப்பு மிக்க மலைக்கோட்டைக்கு, நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், வந்து செல்கின்றனர். நேற்று, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் மலைக்கோட்டைக்கு சென்று, நாமக்கல் நகரின் அழகை கண்டு ரசித்தனர். அதேபோல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், காதலர்கள் என கூட்டம் கூட்டமாக மலையேறி சென்றது, பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.