புத்தாண்டில் சபரிமலையில் அலைமோதியது பக்தர் கூட்டம்
சபரிமலை: புத்தாண்டு தினத்தில் ஐயப்பனை கண்டு வணங்கிட சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கற்பூர தீபம் ஏற்றி சபரிமலையில் பக்தர்கள் புத்தாண்டை வரவேற்றனர். மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 30-ம் தேதி திறந்தது. 31-ம் தேதி முதல் நெய்யபிேஷகம் நடைபெற்று வருகிறது. புத்தாண்டு தினமான நேற்று அதிகாலையில் 18-ம் படியேறி ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் தலைதான் தென் பட்டது. 18-ம் படியேறுவதற்கான கியூ சரங்குத்தியை தாண்டி காணப்பட்டது. சபரிமலையில் பணிபுரியும் ஊழியர்கள் கற்பூர தீபம் ஏந்தி மரக்கூட்டம் வரை சென்று பக்தர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். 18-ம் படிக்கு கீழ் பகுதியில் 2017-ஐ வரவேற்கும் வகையில் கற்பூர தீபம் ஏற்றப்பட்டிருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்திருந்தனர்.